சித்த மருத்துவத்தில் நோய் கணிப்பு முறைகள்

மருத்துவம்

சித்த மருத்துவத்தில் நோய் கணிப்பு முறைகள்

ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதற்கு முன் அவர் எந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதையும், அந்த நோயின் தன்மையையும் முழுவதுமாக அறிந்து கொள்வது மிக மிக முக்கியம். இது எந்த மருத்துவ முறையாக இருந்தாலும் சரி,அந்த வகையில் நோய் கணிப்பு முறைகள் பல உள்ளன.

அவற்றில் மிகச் சிறந்தது நாடி பார்ப்பது என்பது சித்த மருத்துவத்தின் அடிப்படை மட்டுமல்ல, சித்த மருத்துவத்தின் சிறப்பும் கூட, அப்படிப்பட்ட நாடி பற்றி தெரிந்து கொள்வோம்.

நாடி எப்படி உண்டாகிறது?

நம் உடலின் ரத்த ஓட்டத்தின் ஆதாரம் இதயம். இதயம் எப்படி செயல்படுகிறதோ அதற்கு ஏற்றார் போல் தான் நம் உடல் முழுவதும் ரத்தம் ஓட்டம் இருக்கும். மிகை ரத்த அழுத்தம், குறை ரத்த அழுத்தம் என்று சொல்வதெல்லாம் இதயத்தின் செயல்பாட்டைப் பொறுத்து தான். அப்படி இதயம் சுருங்கி, விரியும் தன்மைக்கு (இதயத் துடிப்பு) ஏற்ப உருவாவது தான் நாடி.அதாவது இதயத் துடிப்பும் நாடியும் ஒன்றை ஒன்று ஒத்திருக்கும்.

நாடி பார்க்கும் முறை

மணிக்கட்டுக்கு ஒரு அங்குலம் மேலே மூன்று விரல்களால் ( நடு விரல், மோதிர விரல், சுண்டு விரல்) ஒரே நேரத்தில் மெதுவாக அழுத்தி நாடி பார்க்க வேண்டும். பிறகு விரல்களை மாறி மாறி அழுத்தியும்,  தளர்த்தியும் பார்த்தால் நாடியின் தன்மையை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.

நாடி நிதானம் 

மேலே சொன்னபடி நாடி பார்க்கும் போது ஆள்காட்டி விரல் மூலம் கீழ் வாத நாடி, நடுவிரல் மூலம் கீழ் பித்தநாடி, மோதிர விரல் மூலம் கீழ் சிலேத்தும நாடி ஆகியவற்றின் தன்மையை அறிந்து கொள்ளலாம். இவை தவிர பூத நாடி,குரு நாடி, என இரு நாடிகள் உள்ளது. பெருவிரல் மற்றும் சுண்டு விரல்கள் மூலம் பூத நாடியையும், ஐந்து விரல்கள் மூலம் குரு நாடியையும் அறியலாம்.

எந்தவித உடல் நலக் குறைபாடும் இல்லாத ஒருவருக்கு நாடி பார்த்தால்,அவருடைய வாத நாடி குயில் மாதிரியும் அன்னம் மாதிரியும் நடக்கும். பித்த நாடி ஆமை மாதிரியும்,அட்டை மாதிரியும், சிலேத்தும நாடி பாம்பு மாதிரியும், தவளை மாதிரியும் நடக்கும்.

ஆண், பெண் நாடி பார்க்கும் முறை

மனிதர்களுக்கு வலக்கை, இடக் கை இரண்டிலும் நாடி பார்க்கலாம். ஆனாலும் ஆண்களுக்கு வலது கையிலும், பெண்களுக்கு இடது கையிலும் நாடி பார்ப்பது தான் சிறந்தது.

மு.ர.                                                       தொடரும்