ஸ்டாலினுக்கு தனி ரூல்ஸா.. டேய் கட்டுங்கடா கொடியை என கோவை போலீஸிடம் ஒருமையில் வாக்குவாதம் செய்த பாஜக நிர்வாகி
கோவை
கோவை: 2026 சட்டமன்ற தேர்தலுக்காக தமிழ்நாடு அரசியல் இப்போதே அனல்பறக்க தொடங்கிவிட்டது. ஆட்சியை தக்கவைக்க திமுகவும், ஆட்சியை பிடிக்க அதிமுகவும் முயற்சி செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்கிற பெயரில் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். அந்த வகையில் அவர் நேற்று நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பிரச்சாரம் செய்தார். கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டியில் இன்று மாலை நடைபெறும் கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் கலந்து கொள்கிறார்.
அந்த கூட்டத்தில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, அந்தக் கட்சியின் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவை பாஜகவினர் செய்து வருகிறார்கள். நயினாரை வரவேற்கும் விதமாக, பொள்ளாச்சி சாலையில் வழி நெடுக பாஜக கொடிகள் மற்றும் பிளக்ஸ்கள் வைக்கப்பட்டுள்ளன.
காவல்துறை பாஜக வாக்குவாதம்
அப்போது அனுமதியின்றி கொடி கட்டியதாக காவல்துறையினர் பாஜக கொடி கம்பங்களை அகற்றினார்கள். இதனால் பாஜக கோவை தெற்கு மாவட்ட தலைவர் சந்திரசேகர், முன்னாள் மாவட்ட தலைவர் வசந்தராஜன் உள்ளிட்ட பாஜகவினர் சுந்தராபுரம் பகுதியில் குவிந்தனர். அங்கு அவர்கள் காவல்துறையினருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானம் அருகே மட்டும் கொடி கட்டுங்கள். 10 கிமீ தொலைவுக்கு முன்பிருந்தே கொடி வைக்க கூடாது என்று அறிவுறுத்தியுள்ளனர். அதை ஏற்க மறுத்து பாஜகவினர், காவல்துறையினிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். " இங்கு கொடி கட்ட கூடாது என்று ரூல்ஸ் உள்ளதா. ஸ்டாலின் கூட்டத்திற்காக 50 கிமீ தொலைவுக்கு முன்பிருந்து கொடி கட்டுகின்றனர்.
அங்கு காவல்துறையினர் என்ன செய்கிறார்கள். நாங்கள் கொடி கட்டினால் மட்டும் அகற்ற என்ன உரிமை உள்ளது. நாங்கள் அப்படிதான் கொடி கட்டுவோம்." என்று சொல்லி கொண்டே தங்கள் கட்சியினரிடம் "கட்றா.. கொடியை கட்டுடா" என்று கூறினார். அப்போது மாவட்ட தலைவர் சந்திரசேகர் காவல்துறையினரை ஒருமையில் பேசினார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
