சின்னாளபட்டி- உலக சாதனைப் புத்தகத்தில் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம்
உலகத் திருக்குறள் மையம், புதுச்சேரி மற்றும் உலகத் தமிழர் பேரவை, சென்னை இணைந்து நடத்திய உலகத் திருக்குறள் மாநாடு – 2024 புதுச்சேரியில் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாகத் திருக்குறள் அசிஸ்ட் உலக சாதனை நிகழ்வு இணையவழியாக நடைபெற்றது.
இதில் மதுரை காமராசர் பல்கலைக்கழகம், திண்டுக்கல் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், கள்ளிடைக்குறிச்சி தேசியக் கல்வி அறக்கட்டளை போன்றவை இணைந்து பங்கேற்றன.
நவம்பர் 8 ஆம் தேதி இரவு 9.30 மணிக்குத் தொடங்கிய இந்த நிகழ்வு நவம்பர் 9 ஆம் தேதி நண்பகல் 11.30 மணிவரை அதாவது 14 மணிநேரம் தொடர்ந்து இணைய வழியில் நடைபெற்றது.
திருக்குறள் உலக சாதனை நிகழ்வு அசிஸ்ட் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த உலக சாதனை நிகழ்வினைக்; காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ந.பஞ்சநதம் இணைய வழியாகத் தொடங்கிவைத்தார்.
அவர் பேசுகையில், சிறுவர்களிடமும் இளைஞர்களிடமும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடமும் திருக்குறள் சிந்தனைகள் விதைக்கப்பட வேண்டியது இன்றைய சூழலில் அவசியமான ஒன்றாகும்.
தமிழ்ச் சமூகம் நல்வழிப்படுத்தப்பட வேண்டும். ஐ.நா சபையால் திருக்குறள் உலகப் பொதுமறையாக அறிவிக்கப்படும் நாள் விரைவில் மலரும், அந்த நாள் தமிழுக்கும் தமிழருக்கும் சிறப்பான நாளாக அமையும்.
உலக சாதனை நிகழ்வில் திண்டுக்கல் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம் இடம்பெறுவது இதுவே முதல்முறை.
இனிவரும் காலங்களில் இன்னும் நிறைய உலக சாதனைகளில் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம் பங்குபெறும், என்றார்.
இரவு முழுக்க உலகின் 24 நாடுகளைச் சேர்ந்த திருக்குறள் ஆர்வலர்கள் பங்கேற்று திருக்குறளின் பெருமைகளை, சிறப்புகளை எடுத்துக்கூறினர்.
குறிப்பாக மேனாள் நீதியரசர் அ.முகமது ஜியாவுதீன், எழுத்தாளர் ஹிதயதுல்லா, கலைமாமணி ஷாஜகான், பேராசிரியர் சத்திய மூர்த்தி, பா.சந்திரமௌலி, பேச்சாளர் தேன்மொழி, பேராசிரியர் பிரேமலதா, பேராசிரியர் ஒ.முத்தையா போன்றோர் திருக்குறளின் சிறப்புகள் குறித்து உரை ஆற்றினர்.
குறிப்பாக 8 வயது தொடங்கி 88 வயது வரை உள்ளவர்கள் கலந்துகொண்டு விடிய விடியத் திருக்குறளைப் பற்றிப் பேசியது இந்த நிகழ்ச்சியின் தனிச்சிறப்பு ஆகும்.
உலகத் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் செவாலியோ வி.ஜி.சந்தோசம் விழா நிறைவுப் பேருரை ஆற்றினார். தேசியக் கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் ஆ.முகம்மது முகைதீன் உலக சாதனை நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முன்நின்று செய்திருந்தார்.
அழகர் சாமி