வீட்டின் மேல் டிஷ் வைத்தால் போதும்.. இன்டர்நெட் வரும்.. இந்தியாவில் கால் பதிக்கிறார் எலான் மஸ்க்
எலான் மஸ்க்கின் செயற்கைக்கோள் இணைய நிறுவனமான ஸ்டார்லிங்க் இந்தியாவிற்குள் நுழைவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.
மத்திய அரசாங்கத்தின் டேட்டா விதிகள், பாதுகாப்புத் தேவைகளுக்கான விதிகளை எலான் மஸ்க் ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் இந்திய சந்தையில் ஸ்டார்லிங்க் நுழைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்கிறார்கள்.
இந்தியாவின் தொலைத்தொடர்புத் துறையுடன் (DoT) பல சந்திப்புகளுக்குப் பிறகு ஸ்டார்லிங்க் இந்தியாவிற்குள் வருவது உறுதியாகி உள்ளது. அதன்படி ஸ்டார்லிங்க் நிறுவனம் GMPCS உரிமம் என்றும் அழைக்கப்படும் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவை உரிமத்தை பெறுவதற்கான முக்கிய வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க ஒப்புக்கொண்டது. ஸ்டார்லிங்க் அதன் ஒப்பந்தத்தை இன்னும் முறையாகச் சமர்ப்பிக்கவில்லை என்றாலும், வாய்மொழி வழியாக மத்திய அரசின் விதிமுறைகளை ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.
மத்திய அரசாங்கத்தின் டேட்டா விதிகள், பாதுகாப்புத் தேவைகளுக்கான விதிகளை எலான் மஸ்க் ஏற்றுக்கொண்டதால் விரைவில் இந்திய மார்க்கெட்டில் அதிகாரபூர்வமாக அந்த நிறுவனம் நுழையும்.
எப்படி இயங்கும்: ஸ்டார்லிங்க் பற்றி தெரிந்து கொள்ளும் முன் இணையம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இணையம் என்பது சாட்டிலைட் மூலம் நேரடியாக வருகிறது என்றால் அது தவறு. பொதுவாக இணையம் இப்போது கடலுக்கு அடியில் உள்ள கேபிள்கள் வழியாகவே வழங்கப்படுகின்றன. ஃபைபர் எனப்படும் கண்ணாடி இழைகள் மூலம் இந்த இணையம் கடத்தப்படுகிறது. இந்த இணைய அலைக்கற்றையை ஏலம் எடுக்கும் நிறுவனங்கள் அதை தங்கள் பிராட்பேண்ட் மூலமாகவும், டவர்கள் மூலமாகவும் வீடுகளுக்கு இணையமாக வழங்குகின்றன.
இதைத்தான் ஸ்டார்லிங்க் உடைக்கிறது. இது நேரடியாக சாட்டிலைட் வழியாக இணையத்தை வழங்குகிறது. இந்த திட்டத்திற்கு Starlink internet satellites என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்காக இதுவரை 14600 சாட்டிலைட்டுகள் விண்வெளியில் ஏவப்பட்டு அவை வலம் வந்து கொண்டு இருக்கின்றன. இவைதான் பூமியில் ஸ்டார்லிங்க் ரவுட்டர்களை பயன்படுத்துபவர்களுக்கு இணையத்தை வழங்குகின்றது. இதன் மூலம் உலகம் முழுக்க மூலை முடுக்கெல்லாம் இணையத்தை வழங்க ஸ்பேஸ் எக்ஸ் முடிவு செய்துள்ளது. 400 செயற்கைகோள்கள் மூலம் அடிப்படை இணைய சேவையும், 800 செயற்கைக்கோள்கள் மூலம் வேகமான இணைய சேவையையும் ஸ்பேஸ் எக்ஸ் வழங்கும்.
இப்போது அதிவேக இணைய சேவை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது உலகிலேயே அதிக செயற்கைகோள்கள் கொண்ட தனியார் நிறுவனம் என்ற சிறப்பை ஸ்பேஸ் எக்ஸ் பெற்றுள்ளது. விண்வெளியில் ரயில் போல வலம் வரும் இவை பூமியின் எந்த மூலையில் வேண்டுமானாலும் அந்த நாடு அனுமதித்தால் இணைய சேவையை வழங்க முடியும்.
எப்படி செயல்படும்?: உலகின் எல்லா பகுதிக்கும் ஃபைபர் கேபிளை கொண்டு செல்வது எளிதான காரியம் அல்ல. இதற்காகவே சாட்டிலைட் உதவியுடன் நேரடியாக இணைய சிக்கனல்களை ஸ்பேஸ் எக்ஸ் பூமிக்கு அனுப்பும். இதை எங்கிருந்தும் பயன்படுத்தலாம். ஏற்கனவே சில இணைய சாட்டிலைட் இருந்தாலும் அவை பூமிக்கு மிக தூரத்தில் இருப்பதால் தினசரி பயன்பாட்டிற்கு அவ்வளவு பயனுடையது அல்ல. ஆனால் ஸ்டார்லிங்க் மிக அதிக வேகத்தை தரக்கூடியது.
இதற்காக அந்த நிறுவனம் வழங்கும் டிஷ், ரவுட்டர், மற்றும் கேபிள் ஆகியவற்றை பயன்படுத்தி வீட்டில் செட் அப் செய்ய வேண்டும். வீட்டில் கேபிளுக்கு டிஷ் செட் ஆப் பாக்ஸ் வைப்பது போலத்தான் இதுவும். சாட்டிலைட் மூலம் இணையத்தை பெற்று இவை டிஷ் வழியாக உங்கள் வீடு ரவுட்டருக்கு சிக்னல் வழங்கும்.
வேகத்தைப் பொறுத்தவரை, நீங்கள் தேர்வு செய்யும் திட்டம் மற்றும் உங்கள் இருப்பிடத்தைப் பொறுத்து 25 Mbps முதல் 220 Mbps வரையிலான இணைய வேகத்தை Starlink வழங்குகிறது. இது மற்ற செயற்கைக்கோள் மூலம் பெறப்படும் வேகத்தை விட மிக வேகமானது. பல பாரம்பரிய பிராட்பேண்ட் சேவைகளுடன் ஒப்பிடும் போது இவை அதி வேகம் ஆகும்.
இந்தியாவில் இதன் கட்டணம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றாலும் மற்ற பிராட்பேண்ட் கட்டணத்தை விட குறைவானதாக இருக்கும். எந்த நேரமும் இணைய வசதி இருக்கும். Starlink ஏற்கனவே அமெரிக்கா, கனடா, யுனைடெட் கிங்டம், ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் கிடைக்கிறது. அதேபோல் ஸ்பெயின், இத்தாலி மற்றும் மெக்சிகோவிற்கும் தனது சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது, இது கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உலகம் முழுக்கவே ஏற்படுத்தியுள்ளது. கூடுதலாக, போர்ச்சுகல், பிரேசில், ஆஸ்திரியா மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகள் பெல்ஜியம், அயர்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளும் சமீபத்தில் ஸ்டார்லிங்க் வசதியை பெற்றன.
என்ன மாற்றம்?: இந்தியாவில் அலைக்கற்றை ஏலம் இனி நடக்காது என்று மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்திய மார்க்கெட்டில் விரைவில் எலான் மஸ்க்கின் ஸ்டார் லிங்க் நுழையும்.
வெளிநாட்டு நிறுவனங்கள் இதனால் இந்தியாவில் அலைக்கற்றை வாங்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் இந்த முடிவு காரணமாக இந்தியாவை சேர்ந்த ஜியோ, ஏர்டெல், விஐ போன்ற நிறுவனங்களுக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டு உள்ளன. அலைக்கற்றை நிர்வாக ரீதியாக ஒதுக்கீடு செய்யப்படும். இந்த முறை அலைக்கற்றை ஏலம் விடப்படாது என்று அறிவித்து உள்ளனர்.
இந்திய கோடீஸ்வரர்கள் ரிலையன்ஸ் ஜியோவின் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல் ஆகியோர் செயற்கைக்கோள் அலைக்கற்றை ஒதுக்கீட்டை எப்போதும் போல ஏலம் முறையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். ஆனால் இந்திய மார்க்கெட்டில் நுழைய தீவிரமாக முயன்று வரும் எலான் மஸ்க் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில்தான் எலான் மஸ்க்கிற்கு ஆதரவாக முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. அலைக்கற்றையானது குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்யப்பட்டு.. நிர்வாக அடிப்படையில் விற்பனை செய்யப்படும் . டிராய் இதற்கான கட்டணத்தை நிர்ணயம் செய்யும். உலகம் முழுக்க அலைக்கற்றை எங்கும் ஏலம் விடப்படுவது இல்லை. நிர்வாக அடிப்படையிலேயே அலைக்கற்றை அளிக்கப்படுகிறது. இதை சர்வதேச தொலைத்தொடர்பு யூனியன் எனப்படும் International Telecommunications Union (ITU) கண்காணிக்கிறது. அந்த வகையில் இந்தியாவிலும் அதே முறையை பின்பற்றி நிர்வாக அடிப்படையில் அலைக்கற்றையை வழங்குவோம்.