பொங்கல் பண்டிகையை ஒட்டி ரூ.3, 000 மற்றும் வேட்டி சேலை. !

பொங்கல் தொகுப்பு

பொங்கல் பண்டிகையை ஒட்டி ரூ.3, 000 மற்றும் வேட்டி சேலை. !

பொங்கல் பரிசு தொடர்பாக ஜனவரி 4ம் தேதி முதல்வர்ர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். அதில், "இயற்கையின் முதன்மை வடிவாய் அமைந்த சூரியனுக்கும், விவசாயிகளின் உழைப்புக்கு உறுதுணையாய் விளங்கும் கால்நடைகளுக்கும், உலக மக்களுக்கு உணவளித்து பசிப்பிணி போக்கும் விவசாயிகளுக்கும் நன்றி கூறி குடும்ப உறவுகள் ஒன்றிணைந்து உலகத் தமிழர்களால் பன்னெடுங் காலமாகக் கொண்டாடப்படும் பாரம்பரிய உன்னத விழா பொங்கல் திருநாளாகும்.

பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாட, தமிழ்நாடு அரசு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். இதில், தலா ஒரு அட்டைதாரருக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 முழு நீளக்கரும்பு வழங்கப்படும். இதன் மூலம் 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் பயன்பெறுவர்.

இந்த பொருட்கள் கொள்முதல் செய்வதற்காக மொத்தமாக ரூ.248.66 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள வேட்டி, சேலைகள் அனைத்தும் எல்லா மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரொக்கப்பரிசு மொத்தம் ரூ.6 ஆயிரத்து 936 கோடியே 17 லட்சத்து 47 ஆயிரத்து 959 செலவில் வழங்கப்படும். பொங்கல் திருநாளுக்கு முன்பாக ரொக்கப் பரிசும், பொங்கல் பரிசுத் தொகுப்பும், வேட்டி, சேலைகளும் அனைத்து ரேஷன் கடைகள் வழியாக வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யும்" இவ்வாறு கூறியிருந்தார்.

இதன்படியே பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பில் 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 எண்ணிக்கையிலான அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக்கரும்பு மற்றும் ரூ.3 ஆயிரம் ரொக்க பணம் வழங்கும் பணி கடந்த 8ம் தேதியில் இருந்து நடந்து வந்தது.

இதைத் தொடர்ந்து கடந்த 4 நாட்களில் நடந்த பரிசுத் தொகுப்பு வினியோகம் பற்றி தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் நேற்று அறிக்கைவெளியிட்டார்.

அதில் அவர் கூறுகையில், " பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த டிஜிட்டல் மயமான காலகட்டத்தில் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகை ரொக்கமாக வழங்கிட கூட்டுறவுத் துறையின் சிறப்பான திட்டமிடல் மற்றும் தொய்வில்லாமலும், விரைவாக குறைந்த காலத்தில் வழங்கப்பட்டு உள்ளது. இந்த நடைமுறை பிற தேசிய வங்கிகள் செய்ய முடியாததை, கூட்டுறவு வங்கி திறம்பட செய்து சாதித்திருக்கிறது.

11-ந்தேதி (நேற்று) வரை 24 ஆயிரத்து 924 ரேஷன் கடைகளில் உள்ள 1 கோடியே 86 லட்சத்து 23 ஆயிரத்து 426 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் ரொக்கத் தொகை ரூ.5 ஆயிரத்து 587.02 கோடி விநியோகம் செய்யப்பட்டிருக்கிறது. 1 கோடியே 39 லட்சத்து 6 ஆயிரத்து 292 வேட்டி, சேலைகளும் வழங்கப்பட்டிருக்கிறது" இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

தமிழக அரசு பொங்கல் ரொக்க பரிசுக்கு ரூ.6 ஆயிரத்து 687 கோடியே 51 லட்சத்து 30 ஆயிரம் நிதியை ஒதுக்கி இருக்கிறது ரேஷன் கடைகளில் 5-வது நாளாக இன்றும் 'டோக்கன்' அடிப்படையில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்க பரிசு வழங்கப்படுகிறது. அதன்பின்னர் விடுபட்டவர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்ததது.

ஆனால் இன்றே டோக்கன் இல்லாதவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டதை காண முடிந்தது. பல இடங்களில் டோக்கன் இல்லாதவர்களுக்கு இன்று பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. அதேநேரம் கடந்த நான்கு நாட்களில் கூட்டம் காரணமாக வாங்க முடியாதவர்கள் இன்று கூட்டமே இல்லாமல் எளிதாக பொங்கல் பரிசு வாங்கினார்கள். ரேஷன் கடையில் கூட்டமே இல்லாத நிலையில், போன உடன் பொங்கல் பரிசு கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.