ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து வழக்கில் புதிய திருப்பம்
தமிழ் சினிமாவே பொறாமை கொள்ளும் வகையில், ஆர்த்தி - ஜெயம் ரவி ஜோடி மிகவும் ஒற்றுமையான தம்பதிகளாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜெயம் ரவி தன்னுடைய மனைவி உடனான விவாகரத்தை அறிவித்த சம்பவம் திரை உலகில் தற்போது வரை பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.
மேலும் சினிமா வட்டாரத்தைச் சேர்ந்த பலர், ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவரும் தங்களுடைய பிள்ளைகளுக்காகவாவது சேர்ந்து வாழ்வார்கள் என தங்களின் கருத்தை தெரிவித்தனர். ஆனால் ஜெயம் ரவி தன்னுடைய முடிவில் மிகவும் உறுதியாக உள்ளார். தன்னுடைய அறிக்கையில் கூட ஜெயம் ரவி, குடும்பத்தின் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
இந்த அறிக்கைக்கு பின்னர் ஆர்த்தியின் பெயர் அதிகளவிலான விமர்சனங்களுக்கு ஆளான நிலையில், ஆர்த்தி தன்னுடைய தரப்பில் இருந்து, ஜெயம் ரவியின் அறிக்கையில் குறிப்பிட்ட விஷயத்தை மறுத்தார். தன் மீது கலங்கம் விளைவிக்கும் விதமாக சில பேச்சுகள் அடிபட்டதால் மட்டுமே இந்த விளக்கத்தை கொடுப்பதாகவும், ஜெயம் ரவி தன்னுடன் ஆலோசித்து விவாகரத்து முடிவை எடுக்கவில்லை. கணவர் ரவியை சந்திக்க முயற்சி செய்தபோது, தான் தடுக்கப்பட்டதாகவும் ஆர்த்தி ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
இதையடுத்து, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு இந்த வழக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இருவரையும் சமரசப் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டார். ஜெயம் ரவி இந்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அவரது மனைவி ஆர்த்தி காணொலி காட்சி மூலமாக ஆஜரானார். நீதிபதி இவர்கள் இருவரையும் சமரச தீர்வு மையத்தில் இரு தரப்பும் பேச்சு நடத்த சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையை இன்றைய தினமே நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜெயம் ரவி - ஆர்த்தி தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.