கோவையில் மகளை ஏமாற்றிய காதலன்.. துடியலூரில் தூக்கிய தந்தை, மகன்.. என்ன நடந்தது

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள சேரங்கோடு பகுதியை சேர்ந்த மகாலிங்கம் என்பவருடைய மகன் தமிழ்ச்செல்வன். இவருக்கு 27 வயது ஆகிறது. இவர் துடியலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருடைய அம்மாவின் சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கொல்லக்கொண்டான் ஆகும். தமிழ்ச்செல்வன் ராஜபாளையம் அருகே உள்ள தனது தாயின் ஊருக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்படி சென்று வந்த போது, அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து தமிழ்செல்வனும் அந்த பெண்ணும் செல்போன் மூலம் பேசி காதலை வளர்த்து வந்துள்ளனர். இதைதொடர்ந்து 2 பேரும் பல இடங்களுக்கு சென்று வந்தனர். 3 வருடமாக இருவரும் காதலித்து வந்திருக்கிறார்கள். அப்போது தமிழ்ச்செல்வனின் காதலி, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். ஆனால் தமிழ்ச்செல்வன், வேறு சில பெண்களிடமும் பழகி வந்ததாக கூறப்படுகிறது. அதேநேரம் தனது காதலியிடம் ஏதாவது காரணம் சொல்லி திருமணத்தை தவிர்த்ததுடன், காலத்தை கடத்தி வந்துள்ளாராம். இதனால் மனமுடைந்த அந்த பெண் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உயிரை மாய்த்துக் கொண்டார்.
மகள் உயிரிழக்க தமிழ்ச்செல்வன் தான் காரணம் என தந்தை மலைக்கனி, அண்ணன் ராஜாராம் ஆகியோருக்கு ஒரு கட்டத்தில் தெரியவந்தது. அவர்கள் தமிழ்ச்செல்வன் மீது கடும் கோபம் அடைந்தார்கள். தனது மகளை காதலித்துவிட்டு ஏமாற்றிய தமிழ்ச்செல்வனை கொலை செய்ய வேண்டும் என்று மகன் ராஜாராமிடம் மலைக்கனி அடிக்கடி கூறி வந்தாராம். அதற்கு திட்டமிட்ட அவர்கள் 2 பேரும் கத்தியையும் வாங்கி வைத்துள்ளனர்.
பின்னர் மகளின் காதலன் எங்கே இருக்கிறார் என தேடி வந்தனர். அப்போது தமிழ்ச்செல்வன் கோவை அருகே துடியலூரில் இருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து நேற்று காலை தந்தை-மகன் 2 பேரும் ராஜபாளையத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் கோவை வந்தனர். பின்னர் துடியலூர் சென்றதும் தமிழ்ச்செல்வனின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசினார்கள்.
எதிர்முனையில் பேசிய அவரிடம் எங்கு இருக்கிறாய் என்று கேட்டதற்கு மருத்துவமனையில் இருப்பதாக கூறினார். உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும். மருத்துவமனையில் இருந்து வெளியே வர முடியுமா என்று கேட்டனர். சரி வருகிறேன் என கூறிய தமிழ்ச்செல்வன் வெளியே வந்தார். இதையடுத்து அவரை மருத்துவமனையில் இருந்து சற்று தள்ளி ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு 2 பேரும் அழைத்துச்சென்றனர்.
அங்கு அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்ததால் தான் என் மகள் உயிரைவிட்டிருக்கிறார். அதற்கு காரணமான உன்னை சும்மா விடமாட்டோம் என கூறியபடி தந்தை-மகன் 2 பேரும் கத்தியை எடுத்து வயிறு, மார்பு, கழுத்து உள்ளிட்ட இடங்களில் தமிழ்ச் செல்வனை சரமாரியாக குத்தினர். பின்னர் தப்பிச்சென்றனர். இந்த நிலையில் அந்த வழியாக வந்த சிலர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த தமிழ்ச்செல்வனை மீட்டு அவர் வேலை பார்த்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த துடியலூர் போலீசார் தமிழ்ச்செல்வனின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொலை தொடர்பாக தப்பி ஓடிய 2 பேரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மலைக்கனி, ராஜாராம் ஆகியோர் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த தமிழ்ச்செல்வனை அழைத்துச் செல்வதும், கொலை செய்து விட்டு 2 பேரும் பைக்கில் தப்பிச்செல்வதும் பதிவாகி இருந்தது.
உடனே பைக்கின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் திருப்பூர் பகுதிக்கு தப்பிச்செல்வது தெரிய வந்தது. உடனே திருப்பூர் போலீசார் உதவியுடன் பைகில் தப்பிச்சென்ற தந்தை-மகனை சுற்றி வளைத்து மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது தான் மேற்கண்ட தகவல் தெரியவந்தது.