மதுரை அரிட்டாபட்டியில் வேதாந்தா துணை நிறுவனத்திற்கு டங்ஸ்டன் கனிமம் வெட்டி எடுக்க சுரங்கம் அமைக்க அனுமதி - எஸ் டி பி ஐ கட்சி கண்டனம்

மதுரை அரிட்டாபட்டியில் வேதாந்தா துணை நிறுவனத்திற்கு டங்ஸ்டன் கனிமம் வெட்டி எடுக்க சுரங்கம் அமைக்க அனுமதி - எஸ் டி பி ஐ கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
தமிழ்நாடு அரசால் பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் சுற்றுச்சூழல் தளமாக அறிவிக்கப்பட்ட மதுரை அரிட்டாபட்டியில், சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிமம் எடுக்க, சுரங்கம் அமைப்பதற்காக வேதாந்தா குழுமத்தின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு ஒன்றிய பாஜக அரசு அனுமதி வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வேதாந்த நிறுவனம் சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு அனுமதித்துள்ள அரிட்டாபட்டி கிராமமானது, தமிழக அரசால் பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கிராமத்தைச் சுற்றி ஏழு சிறிய குன்றுகள் உள்ளன என்றும், 250 வகையான பறவைகளுக்கு வாழ்விடமாக இப்பகுதி உள்ளது என்றும் கூறப்படுகிறது. ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெரும் வகையில் இந்தப் பகுதியில் 72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்று குளங்களும் உள்ளன. மேலும், சமணர் படுகைகள், குடைவரை கோயில்கள் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களும், கல்வெட்டுகளும் இப்பகுதியில் உள்ளதாக கூறப்படுகிறது.
இப்படி இயற்கையாகவும், வரலாற்று ரீதியிலும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பகுதியில், சுரங்கம் அமைத்து டங்ஸ்டன் கனிம வெட்டி எடுக்க அனுமதி அளித்தால் அது மிகப் பெரும் பாதிப்பை உண்டாக்கும். மேலும் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரமான விவசாயமும் பாதிக்கப்படுவதோடு, சுற்றுச்சூழலுலையும் மிகப்பெரும் அளவில் பாதிக்கும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர். ஒன்றிய அரசின் இந்த அனுமதிக்கு கிராம மக்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே, தூத்துக்குடியில் நச்சு ஆலை மூலம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி, ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 14 உயிர்களை சுட்டுக் கொல்வதற்கு காரணம் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் நிறுவனமாகும். இந்நிலையில் அதே வேதாந்தா குழுமத்தின் மற்றொரு துணை நிறுவனத்திற்கு, மீண்டும் சுற்றுச் சூழலைக் கெடுக்கும் வகையிலும், இயற்கை மற்றும் விவசாய நிலங்களை பாழாக்கும் வகையிலும் சுரங்கம் அமைக்கும் திட்டத்திற்கு அனுமதி வழங்கிய ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. உடனடியாக இந்த அனுமதி ரத்து செய்யப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் கனிமத்தை வெட்டி எடுக்க சுரங்கம் அமைப்பதற்கு தமிழக அரசு சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்ட எந்த அனுமதியையும் வழங்கக்கூடாது எனவும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.