காளப்பட்டியில் அரசுக்கு சொந்தமான 8 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பை அகற்றிய கோவை மாநகராட்சி. !
கோவை, காளப்பட்டி

கோவை காளப்பட்டியில் 15 வருடம் முன்பு ஜி.டி.நாயுடு லே-அவுட் என்ற பெயரில் 3.22 ஏக்கரில் 31 மனைகள் உருவாக்கப்பட்டது.
அங்கு குழந்தைகளின் விளையாட்டு பூங்காவுக்கு 25 சென்ட் நிலம் பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் அது ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததாக புகார் எழுந்தது. சுமார் ரூ.8 கோடி மதிப்புள்ள அந்த நிலத்தை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக மீட்டார்கள். அங்கிருந்த கட்டிடத்தையும் இடித்து அகற்றினர்.
கோவை மாநகராட்சி கடந்த 2011ம் ஆண்டு விரிவுப்படுத்தப்பட்டது. அதேபோல் அதன்பிறகு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பும் விரிவுப்படுத்தப்பட்டது. அந்த விரிவுப்படுத்தலின் போது, முன்பு பேரூராட்சியாக இருந்த காளப்பட்டி, இப்போது மாநகராட்சியின் எல்லைக்குள் வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு காளப்பட்டியில் ஜி.டி.நாயுடு லே-அவுட் என்ற பெயரில் 3.22 ஏக்கரில் 31 மனைகள் உருவாக்கப்பட்டிருந்தது. அங்கு குழந்தைகளின் விளையாட்டு பூங்காவுக்கு 25 சென்ட் மற்றும் மழலையர் பள்ளிக்கு 5 சென்ட் என மொத்தம் 30 சென்ட் நிலம் பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
கிரையம் செய்திருந்தார்கள்
பொது பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட இந்த நிலத்தை ஏற்கனவே 4 பேர் கிரையம் செய்திருந்தார்க்ள். மேலும் அந்த இடத்தில் ஒர்க் ஷாப் கட்டிடம் கட்டப்பட்டு இருந்தது. அதே இடத்தை 2023-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-வது நபராக ஒருவர் காந்திபுரம் சார்-பதிவாளர் அலுவலகத்தில் கிரையம் செய்திருக்கிறார். இப்படி பொதுப்பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை கிரையம் செய்திருப்பதை கண்டுபிடித்தால் உடனே பத்திரப்பதிவை அதிகாரிகள் ரத்து செய்து விடுவார்கள். பட்டாவும் வழங்கப்படாது. இதுதான் நடைமுறை.
கண்டுபிடித்து நோட்டீஸ்
இந்த சூழலில், இதை தமிழ்நாடு ரிசர்வ் சைட் பாதுகாப்பு சங்கத்தினர் கண்டறிந்தனர். உடனே அப்போதைய கோவை மாநகராட்சி ஆணையரிடம் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி மனு அளித்தனர். அதன் பிறகு மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி ஆணையாளர் மூலம் ஆக்கிரமிப்பாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. இதற்கிடையே ஆக்கிரமிப்பாளரால் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது.
கோவை மாநகராட்சி அதிரடி
இதையடுத்து கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் உடனே ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டார். அந்த உத்தரவின்பேரில் நேற்று காலை கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி செயற்பொறியாளர் குமார் தலைமையிலான அதிகாரிகள் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை பொக்லைன் எந்திரம் உதவியுடன் இடித்து அகற்றி நிலத்தை அதிரடியாக மீட்டார்கள். அந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.8 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. பொதுப்பாதை நிலம் என்பதால், அந்த இடத்திற்கு ஆக்கிரமிப்பாளர் பெயரில் இருந்த கட்டிட வரி, குடிநீர் வரி ரத்து செய்யப்பட்டது. மேலும் ஆக்கிரமிப்பாளர் பெயரில் இருந்த பட்டாவையும் ரத்து செய்து மாநகராட்சி பெயருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
பொதுப்பாதை நிலம்
எனவே பொதுப்பாதைக்கு அல்லது பூங்கா, ரேஷன் கடை, தண்ணீர் தொட்டி என அரசுக்கு வழங்கப்படும் நிலத்தை மறந்தும் வாங்கிவிடாதீர்கள். அதை அறியாமல் வாங்கிய 4 பேர் தப்பித்துவிட்டார்கள். ஆனால் ஐந்தாவதாக வாங்கியவர் பாவம் இழந்துவிட்டார். இதேபோல் போல் அரசு குறிப்பிட்ட பிரிவினருக்கு வழங்கிய இலவச நிலத்தையும் வாங்கிவிடக்கூடாது.. அதுவும் சிக்கலை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.