உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் பஞ்சாப் விவசாயிகள் தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் கவலைக்கிடம். !
விவசாயம்

பஞ்சாப் விவசாயிகள் தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால், சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை இன்று டிசம்பர் 20ம் தேதி 25வது நாளாகத் தொடர்ந்து வருகிறார்.
கானௌரி எல்லைப் போராட்டத் தளத்தில் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், டல்வாலுக்கு கார்டியாக் ஆரெஸ்ட் மற்றும் பல உறுப்புகள் செயலிழக்கும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
ஜக்ஜித் தலேவால் (70) என்ற விவசாயி பஞ்சாப் மற்றும் ஹரியானா இடையேயான கானௌரி எல்லைப் பகுதியில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு, பயிர்களுக்கு MSP சட்டப்பூர்வ உத்தரவாதம் உட்பட, போராட்டம் நடத்தும் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்குமாறு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்.
கானௌரி எல்லையில் அவரது உடல்நிலையைப் பரிசோதித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர்கள், "கடந்த 25 நாட்களாக டல்வால் எந்த விதத்திலும் உணவை உட்கொள்ளவில்லை.
இதன் காரணமாக அவர் ஆபத்தான நிலையில் இருக்கிறார். மேலும் அவருக்கு மாரடைப்பு மற்றும் பல உறுப்புகள் செயலிழக்கும் அபாயம் உள்ளது. நாங்கள் அவரை தினமும் கண்காணித்து வருகிறோம்" என்று தெரிவித்தனர்.
"இன்று அவரது இரத்த அழுத்தம் குறைந்துவிட்டது. நாங்கள் அவரது கால்களை உயர்த்தி மசாஜ் செய்தோம். ஆனால் அவரது நிலைமை மிகவும் மோசமாகி இருக்கிறது.
அவரது உயிர் இப்போது ஒரு நூலிழையில் தொங்குகிறது. எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம். எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வு காரணமாக, அவருக்கு எப்போது வேண்டுமானாலும் மாரடைப்பு ஏற்படலாம். அவரது நிலைமை மோசமாக உள்ளது" என்கின்றனர் மருத்துவர்கள்.