அருள்மிகு ஸ்ரீ பட்டாளம்மன் கோவில் நிர்வாகத்தில் ஒருதலை பட்சமாக இந்து சமய அறநிலையத் துறை செயல்படுவதாக கூறி 12 கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு.!
கிருஷ்ணகிரி

அருள்மிகு ஸ்ரீ பட்டாளம்மன் கோவில் நிர்வாகத்தில் ஒருதலை பட்சமாக இந்து சமய அறநிலையத் துறை செயல்படுவதாக கூறி 12 கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு வழங்கினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், மருதேரி கிராமத்தில் நூற்றாண்டு பழமையான ஸ்ரீ பட்டாளம்மன் ஆலயம் செயல்பட்டு வருகிறது. இந்த கோவிலை நிர்வகிப்பது தொடர்பாக இந்த பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் தலைமையில் 12 கிராமங்களைச் சேர்ந்த முக்கிய நபர்கள் மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் அவர்களிடம் புகார் மனு வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோபாலகிருஷ்ணன்....
போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ள 12 கிராமங்களை சேர்ந்த பொதுமக்களின் குல தெய்வமான ஸ்ரீ பட்டாளம்மன் கோவில் பழுதடைந்த நிலையில் ஒரு தரப்பினர் யாருக்கும் தெரியாமல் கோவிலை இடித்து விட்டனர். இது குறித்து நாங்கள் கேட்டபோது, நாங்கள் புதியதாக கட்டி தருகிறோம் என்று கூறினர்.
இதனை நம்பி 12 கிராமங்கள் சார்பில் எங்களின் பங்களிப்பாக ஒரு பெரிய தொகையினை வழங்கினோம். இதன் பின்னர் கோவிலை கட்டிய பிறகு கோவிலை இடித்தவர்கள் கோவில் பணிகளை முடித்து எங்களை ஆலோசிக்காமல் கடந்த 4.9.25 அன்று கும்பாபிஷேகம் நடத்தினர். அதன் பின்னர் கோவிலை நாங்கள் தான் கட்டினோம். இது எங்களுக்கு தான் சொந்தம் என்று கூறி முழுமையாக நிர்வகித்து வருகின்றனர்.
இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வட்டாட்சியர், அறநிலையத் துறை மூலமாக சமாதான குழு கூட்டம் நடத்தினர். அப்போது கோவில் பொதுவானது, யாரும் சொந்தம் கொண்டாடக் கூடாது, இரண்டு தரப்பினரும் தனி தனியாக நோட்டீஸ்களை அடிக்க கூடாது என்பன போன்ற விதிமுறைகளை வகுத்து அதிகாரிகள் அறிவுரை கூறினர். அதன்படி நாங்கள் பின்பற்றி வருகிறோம். ஆனால் மற்றொரு தரப்பினர் தனியாக நோட்டீஸ்களை அடித்தும், கோவிலை சொந்தம் கொண்டாடி வருகின்றனர்.
இது குறித்து கோவில் அறநிலையத் துறையின் ஆய்வாளர் ராமமூர்த்தியிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. அவர் ஒரு தலைபட்சமாக செயல்படுகிறார். ஒரு தரப்பினருக்கு மட்டும் அனுமதி வழங்கி 12 கிராம மக்களின் குல தெய்வ நம்பிக்கையை சீர்குலைக்கிறார். இதனால் எங்களின் இறைவழிபாடு பாதிக்கப்படுகிறது.
எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கி உள்ளதாக கூறினார்.
செய்தியாளர்
மாருதி மனோ