கர்நாடக சட்டசபையில் மோதல். ! பா ஜ க எம்.எல்.சி. C T ரவி மீது தாக்குதல்.!
கர்நாடகம்

கர்நாடகாவில் சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதனால் சட்டசபை, சட்ட மேலவை கூட்டங்கள் நடந்து வருகிறது. ராஜ்யசபாவில் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிய கருத்துகளுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் நேற்று கர்நாடகா சட்டசபை, சட்டமமேலவையில் எதிரொலித்தது.
காங்கிரஸ் உறுப்பினர்கள் அம்பேத்கர் போட்டோவை வைத்து கோஷமிட்ட நிலையில் பாஜகவினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது கர்நாடகா மேலவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கருக்கும், கர்நாடகா பாஜக எம் எல் சி சிடி ரவிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. அப்போது லட்சுமி ஹெப்பால்கரை அவர் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தி உள்ளார்.
இதையடுத்து லட்சுமி ஹெப்பால்கர் அழுதபடி வெளியேறிய நிலையில் மேலவை தலைவர் மற்றும் கானாப்புரா போலீசில் புகார் செய்தார். இந்த புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிடி ரவியை கைது செய்தனர்.
சுவர்ண சவுதா வளாகத்தில் இருந்து போலீசார் சிடி ரவியை குண்டுக்கட்டாக இழுத்து போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்றனர். இந்த வேளையில் சில காங்கிரஸ் உறுப்பினர்கள் அவரை தாக்க முயன்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே தான் தற்போது சிடி ரவியின் தலையில் இருந்து ரத்தம் வடிந்த போட்டோ வெளியாகி உள்ளது. இதனை சிடி ரவி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதாவது போலீசார் அவரை கைது செய்து இழுத்து சென்றபோது அவரது தலையில் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்பிறகு அவருக்கு தலையில் கட்டுப்போடப்பட்டுள்ளது.
அதன்பிறகு இன்று அதிகாலையில் போலீசார் சிடி ரவியை ராமதுர்கா தாலுகாவுக்கு காரில் அழைத்து சென்றனர். அப்போது போலீசார் தன்னை துன்புறுத்துவதாகவும், புகாரை வாங்கி காங்கிரஸ் தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய மறுப்பதாகவும் கூறி நடுரோட்டில் அமர்ந்து சிடி ரவி தர்ணா செய்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.