டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த நிலையில் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு போராடி மீட்கப்பட்ட இளைஞர்.!
சென்னை
சித்தாலபாக்கத்தில் இளைஞர் ஒருவர் செயல்பாட்டில் இல்லாத டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த நிலையில் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு போராடி மீட்கப்பட்டார்.
குவாட்டர் பாட்டிலை காண்பித்து ஏமாற்றி கீழே இறக்கிய காவல்துறையினர்.
சென்னை மேடவாக்கம் அடுத்த சித்தாலப்பாக்கத்தில் செயல்பாட்டில் இல்லாத டவர் மீது மாலை 5.30 மணியளவில், மகேஷ் என்ற இளைஞர் ஏறி அதன் உச்சியில் நின்று கொண்டு அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்தார்.
இதனை கண்ட பொதுமக்கள் பெரும்பாக்கம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் பெரும்பாக்கம் போலீசார் மற்றும் மேடவாக்கம் தீயணைப்பு துறையினர் நிகழ்விடம் விரைந்து வந்து மேலே ஏறிய நபரை கீழே இறங்க வலியுறுத்தினர்.
ஆனால் கீழே இறங்க மறுத்த அந்த இளைஞர் யாராவது மேலே வந்தால் கீழே குதித்து விடுவேன் என மிரட்டல் விடுத்தார்.
இதனால் பயந்து போன போலீசார் கீழே இருந்து கொண்டு இறங்கி வருமாறு இளைஞரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
முதற்கட்ட விசாரணையில் மதுபோதையில் டவர் மீது ஏறி மிரட்டல் விடுத்ததாகவும், இது போல் ஏற்கனவே ஒருமுறை டவர் ஏறி நள்ளிரவில் இறங்கி வந்ததாகவும் போலீசார் கூறினர்.
4 மணி நேரம் டவர் மீது ஏறிக் கொண்டு இறங்காமல் இளைஞர் ஆட்டம் காட்டியதால் அவரை வேடிக்கை பார்ப்பதற்கு ஏராளமான மக்கள் கூடினர்.
ஆம்புலன்சும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டது.
பின்னர் கோழி பிரியாணியும், குவாட்டரும் வேண்டும் என டவர் மேல் ஏறிய இளைஞர் கேட்க உடனடியாக போலீசார் பாட்டிலில் தண்ணீரை ஊற்றி மது பாட்டில் என கூறி பேசி 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கீழே வரவழைத்து அவரை காப்பாற்றினர்.
பின்னர் மேலே ஏறி இறங்கியதில் உடலில் சிராய்ப்பு காயம் ஏற்பட்டதால் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
சித்தாலப்பாக்கத்தில் டவர் மீது ஏறி மிரட்டல் விடுத்த நபரால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
S S K