எலும்பு முறிவு மருத்துவமனையில் தீ விபத்து.! ஏழு பேர் மரணம் 30 ற்கும் மேற்பட்டோர் படுகாயம்.!
Hospital fire

திண்டுக்கல்லில் உள்ள மருத்துவமனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 7 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 30 க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தீ விபத்து எப்படி நடந்தது என்பது பற்றி நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோல் எம் எல் ஏ செந்தில்குமாரும் விபத்து பற்றி கூறியுள்ளார்.
திண்டுக்கல் - திருச்சி சாலையில் (சிட்டி மருத்துவமனை) தனியார் எலும்பு முறிவு மருத்துவமனை இயங்கி வருகிறது.
இந்த மருத்துவமனையில் 100 க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் இந்த மருத்துவமனையில் நேற்று இரவு 10.00 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்தில் அந்த மருத்துவமனை முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
இதையடுத்து அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
எனினும் ஒருசிலர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
மருத்துவமனை லிப்டில் இருந்த 5 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர்.
மேலும் இருவர் உள்பட இந்த பயங்கர தீ விபத்தில் மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தொடர்ந்து தீயை தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ பி செந்தில்குமார், பேரிடர் மேலாண்மை இயக்குனர் விசாகன், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றும் சம்பவம் குறித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் உயிரிழந்தவர்கள், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சுருளி ( வயது 50), இவரது மனைவி சுப்புலட்சுமி (45), தாடிக்கொம்பு ரோடு பகுதியை சேர்ந்த மாரியம்மாள் (50), இவரது மகன் மணி முருகன் (28), என்.ஜி.ஓ.காலனியை சேர்ந்த ராஜசேகர் (35) மற்றும் ஒரு சிறுமி உட்பட 7 பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
மேலும் காயம் பட்டவர்களுக்கு திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தீ விபத்து எப்படி நடந்தது என்பதை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவரின் உறவினர் கூறியதாவது:-
இந்த ஆஸ்பத்திரியில் என் தம்பியை அட்மிட் செய்திருந்தோம். 7.00 மணியளவில் ஆஸ்பத்திரியில் இருந்து புகை வந்தது. ஐ சி யூ அறையில் இருந்து திடீரென புகை வந்தது. 3 மணியில் இருந்து 6 மணிக்குள் 5 ஆபரேஷன்கள் நடந்தது. ஆபரேஷன் பண்ணிய 5 பேரும் ஐசியூவில் தான் இருந்தாங்க. அதில் என் தம்பியும் ஒருவன். அங்க இருந்து புகை அதிகமாக வரத்தொடங்கியது.
இதையடுத்து அங்கிருந்த டாக்டர்கள், நர்சுகள் வெளியே ஓட தொடங்கினர்.
இதைக் கண்ட நாங்கள் உள்ளே சென்று பார்த்தோம். புகை அதிகமாக வந்ததால் உள்ளே இருந்தவர்களால் சுவாசிக்க முடியவில்லை.
நான் அங்குள்ள கண்ணாடியை உடைத்து விட்டேன். கொஞ்சம் புகை வெளியே வந்தது. கரண்டும் போய்விட்டது. நாங்களும் தீயணைப்பு துறைக்கு போன் செய்தோம். உடனே அவர்கள் வந்து தான் எல்லாரையும் மீட்டார்கள். ஐசியூவில் இருந்த எல்லாரையும் காப்பாற்றிவிட்டங்க. அவங்களுக்கு நான் நன்றி சொல்லிக்கிறேன். இவ்வாறு அந்த பெண் கூறினார்.
பழனி எம் எல் ஏ செந்தில் குமார் கூறுகையில், "சரியாக 9.30 மணிக்கு தீ விபத்து நடந்திருக்கிறது. மின்கசிவால் ஏற்பட்டதாக முன் தகவலாக சொல்லியிருக்கின்றனர்.
காவல்துறை, தீயணைப்பு துறை, ஊரக வளர்ச்சித் துறை, எல்லா அரசுத்துறை அதிகாரிகள் கடந்த 1 மணி நேரத்திற்கும் மேலாக அங்கே இருந்து 28 க்கும் மேற்பட்டோரை ஆஸ்பத்திரியில் மீட்டு அனுமதித்து உள்ளார்கள்.
6 நபர்கள் இறந்ததாக கூறியிருக்கிறார்கள்.இன்னும் வேறு யாரும் உள்ளே இருக்கிறார்களா என்று பார்த்துகொண்டு தான் இருக்கிறார்கள்.
நானும் இங்கு தான் இருக்கிறேன்.வேறு யாரும் உள்ளே இல்லை.எல்லாரும் மீட்கப்பட்டதாக காவல்துறை, தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும் மீண்டும் ஒருமுறை பார்க்குமாறும் கூறியுள்ளேன். விபத்து நடந்த 10 - 15 நிமிடத்துக்குள் அனைத்து துறை அதிகாரிகளும் அங்கே வந்துட்டாங்க. அங்கு வந்து துரித பணிகளை செய்தார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விபத்து திண்டுக்கல் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அழகர் சாமி