மௌனம் கலைத்த வடிவேலு.! கடைசியாக சொன்ன வார்த்தை.!
சினிமா

வைகை புயல் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் வடிவேலு இடையில் சில பிரச்னைகளால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார்.
அதனையடுத்து நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் தோல்வியை சந்தித்தாலும் அடுத்ததாக நடித்த மாமன்னன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்போது அவரது நடிப்பில் மாரீசன், கேங்கர்ஸ் ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராக இருக்கின்றன.
தமிழ் சினிமாவின் தவிர்க்கவே முடியாத காமெடி நடிகர்களில் ஒருவர் வடிவேலு. அவரது காமெடி இல்லாமல் ஒருவரால் ஒரு நாளை கடந்துவிட முடியாது. அந்த அளவுக்கு அனைத்து நாட்களிலும், அனைவரிடமும் வியாபித்திருக்கிறார். ராஜ்கிரணால் சினிமாவுக்கு வந்தவர் இன்று இருக்கும் உயரம் வேறு. அதற்கு அவரது திறமை மிக முக்கிய காரணங்களில் ஒன்று. நடிக்க வந்த ஆரம்பத்தில் எந்தவித ஈகோவும் இல்லாமல் கவுண்டமணி, செந்தில், விவேக் ஆகியோருடன் இணைந்து நடித்தார். அதில் வடிவேலுவின் உடல்மொழி மட்டும் தனியாக தெரிந்தது.
டாப் நடிகரான வடிவேலு: நகைச்சுவை மட்டுமின்றி அப்போதே கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாகவும் தன்னை வலுப்படுத்திக்கொண்டார். அப்படி அவர் நடித்த சில படங்கள் மிகப்பெரிய பெயரை பெற்றன. அதேபோல் தன்னுடைய நகைச்சுவையில் எந்தவிதமான உருவ கேலியும் செய்யாமல் தன்னைத்தானே தாழ்த்திக்கொண்டு நடித்தது அவரை மேலும் அடுத்தக்கட்டத்துக்கு கொண்டுசென்றது. அதேபோல் அவரது டயலாக் டெலிவிரியும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
வடிவேலுவை சுற்றிய பஞ்சாயத்து: சூழல் இப்படி இருக்க விஜயகாந்த்துக்கும் தனக்கும் இருந்த பிரச்னையை அவரே பெரிதாக்கிக்கொண்டார். குறிப்பாக அவரை எதிர்க்கிறேன் என்பதற்காக அரசியல் மேடை ஏறிய அவர்; தனது கிராஃபை உச்சத்திலிருந்து அதள பாதாளத்தில் விழ வைத்தார். மேலும் அவரை வைத்து படம் எடுக்க பலரும் யோசித்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கப்பட்ட அவர் ஒரு கட்டத்தில் முழுவதுமாக ஓரங்கட்டப்பட்டார். இருந்தாலும் வடிவேலுவின் காமெடிகள்தான் டிவிக்கள், மொபைல்கள் என அனைத்திலுமே இருந்தது.
ரீ என்ட்ரி: ஒருவழியாக அவரது பஞ்சாயத்துக்கள் அனைத்துமே முடித்து வைக்கப்பட்டன. அதனையடுத்து நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் ரீ எண்ட்ரி கொடுத்த அவருக்கு அந்தப் படம் சரியாக கைக்கொடுக்கவில்லை. அதனைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் அவர் நடித்த மாமன்னன் திரைப்படம் வேறு மாதிரியான வடிவேலுவை ரசிகர்களுக்கு பரிசளித்தது. அடுத்ததாக அவர் மாரீசன் கேங்கர்ஸ் ஆகிய படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இவற்றில் கேங்கர்ஸ் திரைப்படம் நாளை வெளியாகவிருக்கிறது.
வடிவேலுவின் பேட்டி: இந்நிலையில் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு வடிவேலு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர், "ஒருமுறை எனது ஊரில் நடந்த திருமணத்துக்கு ராஜ்கிரண் வந்திருந்தார். அவரை அழைத்து வந்தவரும், எனது தம்பியும் நண்பர்கள். எனவே எனது தம்பி அந்த நபரிடம் என்னை பற்றி சொல்லியிருக்கிறார். நான் சென்று ராஜ்கிரணோடு பேசிக்கொண்டிருந்தேன். அவரும் சென்னை சென்றுவிட்டார்.
நான்கு வருடங்கள்: சென்னை சென்ற அவர் இரண்டு வாரங்கள் கழித்து என்னை அழைத்து வர சொல்லியிருக்கிறார். நானும் சென்னைக்கு வந்து ராஜ்கிரண் அலுவலகத்தில்தான் தங்கியிருந்தேன். படங்களிலும் நடிக்க ஆரம்பித்தேன். அப்படிப்பட்ட சமயத்தில்தான் எனக்கு வரிசையாக வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. நானும் ராஜ்கிரணிடம் சென்று வேறு இடத்தில் தங்கிக்கொள்கிறேன் என்று சொன்னேன். அவரும் ஆசீர்வாதம் செய்து அனுப்பிவைத்தார். சென்னைக்கு நான் வரும்போது நல்ல ட்ரெஸ்ஸோடுதான் வந்தேன். அம்மணமாக வரவில்லை. ராஜ்கிரண் எனக்கு துணி எடுத்துக்கொடுத்தார் என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால் ஒன்று சினிமாவை பொறுத்தவரை அவர்தான் எனது கடவுள்" என்றார் வடிவேலு.