அமைச்சர் பதவி வேண்டுமா? சிறைக்கு செல்லாமல் இருக்க ஜாமின் வேணுமா? செந்தில் பாலாஜிக்கு உச்சநீதி மன்றம் கேள்வி?

தமிழகம்

அமைச்சர் பதவி வேண்டுமா? சிறைக்கு செல்லாமல் இருக்க ஜாமின் வேணுமா?  செந்தில் பாலாஜிக்கு உச்சநீதி மன்றம் கேள்வி?

அமைச்சர் பதவியில் நீடிக்க விரும்புகிறீர்களா அல்லது சிறைக்கு செல்லாமல் சுதந்திரமாக இருக்க விரும்புகிறீர்களா என செந்தில் பாலாஜி வழக்கில் உச்சநீதி மன்றம் வினோதமான கேள்வியை எழுப்பியுள்ளது.

செந்தில் பாலாஜி ஜாமீனுக்கு எதிராக மனு

செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி விஜயகுமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். செந்தில் பாலாஜி மீது போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக குற்றச்சாட்டு அடிப்படையில் வருமானவரி மற்றும் அமலாக்கத்துறை ரெய்டு மேற்கொண்டது.

சட்டவிரோத பணப்பறிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட அவர், நீண்டகாலமாக ஜாமீன் கிடைக்காமல் ஓராண்டுக்கு மேல் புழல் சிறையில் இருந்தார். பின்னர் மருத்துவ காரணங்கள் மற்றும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாகக் கூறி ஜாமீன் பெற்றார். ஆனால், ஜாமீன் பெற்ற சில நாட்களிலேயே மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றது இந்த வழக்கில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

"நன்னடத்தை அடிப்படையில் ஜாமீன் வழங்கவில்லை"

விசாரணையின்போது, நீதிபதிகள் செந்தில் பாலாஜி தரப்பிற்கு கடுமையாக கேள்விகளை முன் வைத்தனர். "நன்னடத்தை அடிப்படையில் உங்களுக்கு ஜாமீன் வழங்கவில்லை. அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது என்ற காரணத்தினால் மட்டுமே ஜாமீன் வழங்கப்பட்டது," என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், "ஜாமீன் வழங்கப்பட்டபோது செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லை. ஆனால், இப்போது அமைச்சராக இருக்கிறார். அப்போதைய சூழல் வேறு, இப்போதைய சூழல் வேறு," என்று குறிப்பிட்டனர்.

செந்தில் பாலாஜியின் முந்தைய செயல்பாடுகளையும் கேள்விக்கு உட்படுத்திய நீதிபதிகள் "அமைச்சராக இருந்தபோது, புகார்களுடன் செட்டில்மென்ட் செய்தது நினைவில்லையா? தற்போது மீண்டும் அமைச்சராக இருக்கும் அவர், சாட்சியங்களைக் கலைக்க மாட்டார் என்று எப்படி உறுதியளிக்க முடியும்?" என்று கேள்வி எழுப்பினர். "ஜாமீன் என்பது சாட்சியங்களைக் கலைப்பதற்கு வழங்கப்பட்ட உரிமம் அல்ல," என்றும் நீதிபதிகள் கண்டிப்புடன் கூறினர்.

:- காஷ்மீர் தாக்குதல் எதிரொலி! 'மத்திய உள்துறை இணையமைச்சர் ஆகும் அண்ணாமலை!' அமித்ஷாவின் பலே திட்டம்!

வேறு மாநிலத்திற்கு வழக்கு மாற்றும் கோரிக்கை நிராகரிப்பு

செந்தில் பாலாஜி தரப்பு, சாட்சியங்களைக் கலைப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக மனுதாரர் தெரிவித்த அச்சத்தை எதிர்கொள்ள, வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. ஆனால், இந்தக் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். "வேறு மாநிலத்திற்கு வழக்கை மாற்றுவதை ஏற்க முடியாது. அதேபோல், செந்தில் பாலாஜி சாட்சியங்களைக் கலைக்க மாட்டார் என்ற உறுதியையும் ஏற்க முடியாது," என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

"அமைச்சர் பதவியா, சிறையா?"

மேலும், நீதிபதிகள் செந்தில் பாலாஜி தரப்பை நோக்கி, "அமைச்சர் பதவியில் நீடிக்க விரும்புகிறீர்களா, அல்லது மறுபடியும் சிறைக்குச் செல்லாமல் சுதந்திரமாக இருக்க விரும்புகிறீர்களா?" என்று கேள்வி எழுப்பினர். இந்தக் கேள்வி, அமைச்சர் பதவியில் தொடர்வது ஜாமீனுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டுவதாக அமைந்தது. "அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து ஜாமீன் பெற்றீர்கள். ஆனால், ஜாமீன் பெற்ற சில நாட்களிலேயே மீண்டும் அமைச்சரானது எப்படி?" என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பதில் தர அவகாசம்

இந்த வழக்கு விசாரணை அரும் திங்கட்கிழமை மீண்டும் பட்டியலிடப்பட்டு உள்ளது. அன்றைய தினம் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் தொடர்வாரா அல்லது ஜாமீன் ரத்து செய்யப்படுமா என்பது குறித்து அவரது தரப்பு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி அமைச்சராக தொடருவாரா?அல்லது ஜாமீன் பெற்று பதவி ஏதுமின்றி வழக்கை சந்திப்பாரா என்பதை செந்தில் பாலாஜி தரப்பு திங்கட்கிழமைக்குள் பதில் தர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.

:- 'சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகனை விடுதலை செய்த உத்தரவு ரத்து!' உயர்நீதிமன்றம் அதிரடி!