அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் இன்னொரு நபருக்கு தொடர்பா - காவல்துறை தீவிர விசாரணை.!
குற்றம்

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக, பல்கலைக்கழக பின்புற நடைபாதையில் பிரியாணிக்கடை நடத்தி வந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டை உலுக்கிய இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக போலீசார் ஞானசேகரனை கைது செய்யும் போது தப்பி ஓடியதால் கீழே விழுந்து இடது கால், இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள கைதிகளுக்கான வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எஃப்ஐஆர் வெளியாகி பரபரப்பு
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் எஃஐஆர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எஃப்ஐஆரில் மாணவி கூறிய புகார்கள் குறித்த தகவல்களும் இடம்பெற்றுள்ளாத தெரிகிறது. அதில் பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில், "நாங்கள் தனியாக இருந்ததை வீடியோ எடுத்து டீன் மற்றும் பேராசிரியரிடம் காண்பித்து டிசியை தரவைப்பேன் என மிரட்டினார். செல்போனில் இருந்த எனது தந்தை மொபைல் நம்பரை எடுத்துக் கொண்டு அவருக்கு வீடியோ அனுப்பி விடுவதாக மிரட்டினான். நாங்கள் இருவரும் எவ்வளவு கெஞ்சியும் அவர் எங்களை விடுவதாக இல்லை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டினார். டிசி தரவைப்பேன் என கூறி எனக்கு. அடிபணியவில்லை என்றால் வீடியோவை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டு விடுவேன் எனக்கூறி வலு கட்டாயமாக என்னை பாலியல் வன்புறுத்தலுக்கு ஆளாக்கினார்." என பாதிக்கப்பட்ட மாணவி தெரிவித்தாக கூறப்படுகிறது.
அந்த இன்னொரு நபர் யார்?
அண்ணா பல்கலைக்கழக மாணவியை மிரட்டும் போது ஞானசேகரனை செல்போனில் தொடர்பு கொண்ட நபர் யார் என்பது குறித்தும், கைது செய்யப்பட்ட ஞானசேகரனின் செல்போன் அழைப்புகளை பட்டியலிட்டும் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஞானசேகரன் உடன் ஒருவர் வந்ததாக மாணவி புகார் அளித்திருந்த நிலையில் அந்த நபர் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்த செல்போன் எண்களை சேகரித்து சைபர் க்ரைம் போலீசாரும் விசாரணையை துரிதப்படுத்தி வருகின்றனர். அந்த நபர் யார்?, அவருக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து முழுமையான விசாரணைக்கு பிறகே தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
F I R ல் மாணவியின் விபரங்கள் வெளியானதால் சர்ச்சை
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி பெயர், முகவரியுடன் எஃப்ஐஆர் வெளியானதால் சர்ச்சை எழுந்துள்ளது. முழு விவரங்களுடன் அவசரமாக ஆன்லைனில் எஃப்ஐஆரை பதிவேற்ற வேண்டிய அவசியம் என்ன? பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதற்கு காவல்துறை, பல்கலைக்கழகம் பொறுப்பேற்குமா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவருடைய அடையாளங்களை வெளியிடுவதற்கான காரணம் என்ன? இதுதான் காவல்துறையின் செயலா என பெற்றோர்களும், மாணவர்களும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இது குறித்து அண்ணாமலை, எம்.பி.கனிமொழி, எடப்பாடி கே.பழனிச்சாமி, தொல் திருமாவளவன் என பலதரப்பு அரசியல் தலைவர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.