அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு விரைவில் கூடுதல் அதிகாரம்.!

சட்டப்பேரவை

அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு விரைவில் கூடுதல் அதிகாரம்.!

தமிழக அமைச்சர்களில் அனைவராலும் அறியப்படக் கூடியவர்களில் ஒருவர் தான் பழனிவேல் தியாக ராஜன் எனும் பி.டி.ஆர்.

திமுக ஆட்சி அமைந்தபோது அவர் தமிழக நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவரின் சிறப்பான செயல்பாடுகளை தமிழ்நாடே பாராட்டியது. ஆனால், சில காரணங்களால் அவரது துறை மாற்றப்பட்டது. அவருக்கு தகவல் தொழில்நுட்பத் துறை ஒதுக்கப்பட்டது. அந்த துறையிலும் தன்னுடைய சக்திக்கு மீறிய உழைப்பையும் அர்ப்பணிப்பையும் பிடிஆர் தொடர்ந்து வழங்கி வருகிறார்.

சட்டப்பேரவையில் வெளிப்படையான பேச்சு

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் சட்டப்பேரவையில் பேசிய பிடிஆர், தன்னுடைய துறைக்கு போதிய நிதியும், அதிகாரமும் இல்லை என்பதை வெளிப்படையாகவே பேசினார். இது திமுக அமைச்சர்களுக்கே அதிர்ச்சியாக இருந்தது. பிடிஆர் பேசியதை வைத்து பாஜக உள்ளிட்ட கட்சிகள் அரசியலுக்குள் அரசியல் செய்ய முயற்சித்தன. ஆனால், எப்போதும் போல முதல்வர் மு.க.ஸ்டாலின், பிடிஆர் பேச்சை ரசித்தார். பிடிஆர் இப்படிதான். அவர் அப்படிதான் பேசுவார் என்பது முதலமைச்சருக்கு நன்றாக தெரியும்.

அடுத்த நாளே பதில் கொடுத்த முதல்வர்

அடுத்த நாள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தாத்தா தமிழ்வேள் பிடி ராஜன் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றார் முதல்வர் ஸ்டாலின். அதில் அவர் பேசியபோது பிடிஆர் பழனிவேல்தியாகராஜன் மீது எவ்வளவு அன்பை வைத்திருக்கிறார் என்பது வெளிப்படையாக தெரிந்தது. பிடி ராஜனுக்கு நமது பிடிஆர் மட்டும் வாரிசு இல்லை நானும் வாரிசுதான். அதுவும் திராவிட வாரிசு என்று பேசினார். அதுமட்டுமின்றி, அறிவார்ந்த, வலிமையான வாதங்களை எடுத்து வைப்பவர் பழனிவேல் தியாகராஜன். அவருடைய வாதங்கள் அவருக்கு பலம் சேர்க்க வேண்டுமே தவிர, பலவீனமாக மாறிவிடக் கூடாது. இதை அவர் மீதுள்ள அன்பால் சொல்கிறேன் என்று முதல்வர் பேச, பேச அரங்கமே அமைதி நிறைந்தது. முதல்வரின் இந்த பேச்சில் பொதிந்துக்கிடந்த அர்த்தங்களை பிடிஆரும் அறிவார். 

இந்நிலையில், விரைவில் தமிழக அமைச்சரவை 6வது முறையாக மாற்றியமைக்கப்படவுள்ளது. சட்டப்பேரவை இந்த மாத இறுதியுடன் முடிவடையுள்ள நிலையில், அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு துறை அமைச்சர்கள் குறித்து விரிவான ரிப்போர்ட் அதிகாரிகள் மட்டத்திலும் உளவுத்துறை சார்பிலும் தயார் செய்யப்பட்டு வருகிறது. அந்த அறிக்கைகளின் அடிப்படையில், அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றியமைக்கப்படவுள்ளதுடன் சிலரிடமிருந்து அமைச்சர் பொறுப்பும் பறிக்கப்படவுள்ளது. அதோடு, புதிய இருவருக்கு மாற்றியமைக்கப்படவுள்ள அமைச்சரவையில் இடமும் கொடுக்கவிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

பிடிஆருக்கு கூடுதல் துறை / அதிகாரம்

இந்த அமைச்சரவை மாற்றத்தின்போது தனக்கும் தன் துறைக்கும் போதிய அதிகாரமும் நிதியும் இல்லை என்று பிடிஆர் வருத்தப்பட்டு கூறியதற்கு தீர்வு காணப்படவுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு புதிய துறை அல்லது கூடுதல் துறைகளை ஒதுக்க ஆயத்த பணிகள் நடைபெற தொடங்கியுள்ளன. அதோடு, அவருக்கான அதிகாரமும், நிதியும் கூடுதலாக கிடைக்கவுள்ளது. இதன்மூலம், பிடிஆர் மீதும் பிடிஆரின் செயல்பாடுகளிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிக அக்கறையுடன் இருக்கிறார் என்பது வெளிப்படையாக தெரியவுள்ளது.