கரூர் விஜய் பரப்புரையின் போது ஜெனரேட்டரை ஆஃப் செய்தவர் யார்? கண்டுபிடித்த போலீசார். !

கரூர்

கரூர் விஜய் பரப்புரையின் போது ஜெனரேட்டரை ஆஃப் செய்தவர் யார்?  கண்டுபிடித்த போலீசார். !

கரூரில் விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலின்போது ஜெனரேட்டரை ஆஃப் செய்தவரை விசாரணைக்கு வரச் சொல்லி அழைப்பு விடுத்துள்ளது காவல்துறை.

விஜய் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ மூலமாக ஜெனரேட்டரை ஆஃப் செய்தவரை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

தவெக தலைவர் விஜய் கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை அன்று பிரச்சாரம் மேற்கொண்டபோது கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 41 நபர்கள் உயிரிழந்துள்ளனர். ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைத்து விசாரணை நடத்த உத்தரவு தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த நிலையில் விசாரணையை மேற்கொண்டு வருகிறார் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன்.

இதற்கிடையே, 41 பேர் பலியான தவெக விஜய் கூட்டம் தொடர்பாக தமிழக அரசு மீது தவெகவினர் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர். தமிழக அரசின் செயல்கள் காரணமாகவே இந்த அசம்பாவிதம் நடந்ததாக புகார்கள் வைக்கப்பட்டன. முதலில் அங்கு மின்சாரம் நிறுத்தப்பட்டதாக புகார்கள் வைக்கப்பட்டன. ஆனால் இந்த புகாரில் உண்மை இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு, தள்ளுமுள்ளுவிற்கு திடீரென அங்கு ஏற்பட்ட மின் தடையே காரணம் எனச் சொல்லப்பட்டது. ஆனால், இதைத் திட்டவட்டமாக மறுத்துள்ள மின்வாரியம், விஜய் அங்கு பேசும்போது மின்தடை எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவித்துள்ளது. விஜய் பேசும்போது மின்சாரம் முழுமையாக இருந்தது என்றும் அருகே இருந்த கடைகளில் விளக்குகள் எரிந்து கொண்டு இருப்பதை வீடியோக்களில் பார்க்க முடிகிறது என்றும் எனவே மின்தடை என்பது பொய்யான தகவல் என மின்வாரிய தலைமை பொறியாளர் ராஜலட்சுமி தெரிவித்தார்.

இப்போது ஜெனெரேட்டரை ஆளும் அரசு நிறுத்திவிட்டதாக தமிழக வெற்றிக் கழகத்தினர் குற்றம்சாட்டினர். ஆனால் அதை செய்ததும் தவெக கட்சியினர்தான் என்பது உறுதியாகி உள்ளது. தமிழக வெற்றிக் கழக கூட்டத்தின் போது மக்கள் கூட்டம் அதிகரிக்க கடும் இட நெருக்கடி ஏற்பட்டது. இதனால் மக்கள் நிற்க இடம் இல்லாமல் மரங்களில் ஏறத் தொடங்கினர். 100 அடி சாலையில் 60 அடி நீள பேருந்து நுழைந்த போது நெருக்கடி இன்னும் அதிகரித்தது.

இதனால் விஜய் ரசிகர்கள் பலர் அங்கே இருந்த ஜெனரேட்டர் அறைக்குள் சென்றனர். சாலையோரம் இருந்த ஜெனரேட்டர்கள் அறைக்குள் சென்றனர். அங்கே டீசல் கேன்கள் இருந்தன. இதனால் அசம்பாவிதத்தை தடுக்க வேண்டும் என்று விஜய்யின் பயணத்தை ஏற்பாடு செய்த தவெக குழுவை சேர்ந்தவரே ஜெனரேட்டரை ஆஃப் செய்தார். அவர்தான் பாதுகாப்பு கருதி ஜெனரேட்டரை நிறுத்தினார் எனத் தெரியவந்துள்ளது.

கூட்ட நெரிசல் அதிகரித்தபோது இரும்பு தகரங்கள் வைத்து அடைக்கப்பட்டுள்ள ஜெனரேட்டர் அறைக்குள் சிலர் உள்ளே புகுந்தனர். அவர்கள் அந்த ஜெனரேட்டரை அணைத்து உள்ளனர். ஜெனரேட்டர் ஆஃப் ஆன போது கூட, தெரு விளக்குகள் அணையவில்லை. அவர்கள் அமைத்த கூடுதல் விளக்குகள் தான் அணைந்துள்ளன. விஜய் மேற்கொண்ட பரப்புரையின் போது, யாரும் மின் தடை செய்யவில்லை என்று தெரிவித்தார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.

இந்நிலையில் கரூரில் தவெக பரப்புரை கூட்ட நெரிசலின் போது ஜெனரேட்டரை ஆஃப் செய்தவரை கண்டுபிடித்துள்ளது காவல்துறை. ஜெனரேட்டர் ஆபரேட்டிங் ரூமுக்குள் பலர் புகுந்தபோது, ஆபரேட்டர் ஜெனரேட்டரை ஆஃப் செய்தார் என்பதற்கான வீடியோ ஆதாரமும் உள்ளது.

ஜெனரேட்டர் ஆபரேட்டராக பணியில் இருந்தவரிடம் போலீசார் பேசி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் வெளியூரில் உள்ளதால் அவரை நாளை கரூருக்கு வரச் சொல்லி உள்ளதாகவும், அவரிடம் அன்று நடந்தது என்ன என்பது பற்றி விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையிலான குழுவினர் இது குறித்த விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.