அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெ. படத்துடன் கொடி... பசும்பொன்னில் புதிய கட்சியை தொடங்கினார் சசிகலா .!

புதிய கட்சி துவக்கம் சசிகலா

அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெ. படத்துடன் கொடி... பசும்பொன்னில் புதிய கட்சியை தொடங்கினார் சசிகலா .!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற வி.கே.சசிகலா

தனது புதிய அரசியல் பயணத்தைத் தொடங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அ.தி.மு.கவில் மீண்டும் இணைவதற்கு சசிகலா மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்காத நிலையில், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து இந்தப் புதிய முடிவை எடுத்துள்ளார். தமிழ்நாடு மக்களுக்காகவும், தொண்டர்களுக்காகவும் புதிய களத்தை, புதிய கட்சியை ஆரம்பிப்பதாக அவர் அறிவித்தார். அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்கள் பொறிக்கப்பட்ட கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறங்கள் கொண்ட கட்சிக்கொடியை அவர் அறிமுகப்படுத்தினார். கட்சியின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்தக் கட்சி அண்ணா, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா காட்டிய திராவிடப் பாதையில் செயல்படும் என உறுதிபடத் தெரிவித்தார்.

தனது பேச்சின்போது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சசிகலா கடுமையாகச் சாடினார். தான் பெங்களூரு சிறையில் இருந்தபோது, எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளைத் தன் வசம் வைத்துக்கொண்டு தமக்குத் தினமும் நெருக்கடி கொடுத்ததாகக் குற்றம் சாட்டினார். தான் சிறை சென்ற 2 மாதங்களில், சில அமைச்சர்கள் மூலம் தன்னைத் தமிழ்நாடு சிறைக்கு மாறிக் கொள்ளுமாறு தூது அனுப்பியதாகவும், அவர்கள் சொன்னபடி தான் சிறை மாறியிருந்தால் இன்று உயிருடன் உங்க முன் பேசியிருப்பேனா என்பதே சந்தேகம் என்றும் பரபரப்பாகப் பேசினார். பெயர் சொல்லிப் பேசும் அளவிற்கு இ.பி.எஸ் நல்லவர் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜெயலலிதாவின் 30 ஆண்டுகால நிழலாகத் தொடர்ந்த சசிகலா, அவரது மறைவுக்குப் பிறகு 2016-ல் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் ஆனார். அவர் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டபோது, ஓ.பன்னீர்செல்வம் அவருக்கு எதிராகத் தர்மயுத்தம் நடத்தினார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை செல்வதற்கு முன், எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக அறிவித்துவிட்டுச் சென்றார். 9 வருடங்களாக அமைதியாக இருந்ததுபோல இனி என்னால் அமைதியாக இருக்க முடியாது என்று தனது அரசியல் வேகத்தை வெளிப்படுத்தினார்.

கடந்த ஒரு மாத காலமாக அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினரைச் சந்தித்து வந்த சசிகலாவின் இந்த புதிய கட்சித் தொடக்கம், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவின் வாக்கு வங்கியில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.