கோவையில் கள்ளக்காதலியை கொன்ற கள்ளக்காதலனை கைது செய்த போலீசார்.!
கோவை

கோவை துடியலூர் அருகே உள்ள மகாலட்சுமிபுரம் எஸ்.எம்.நகரை சேர்ந்தவர் டிரைவர் அருள். இவருடைய மனைவி கலைத்தாய்க்கு 33 வயது ஆகிறது.
இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. கலைத்தாய் துடியலூர் பகுதியில் உள்ள ஒரு அலுமினிய பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அப்படி வேலை செய்து வந்த போது, அந்த அலுமினிய பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளரான உருமாண்டம்பாளையம் எப்.சி.ஐ.நகரை சேர்ந்த என்ஜினீயரான 44 வயதாகும் அரிச்சந்திரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.
இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியிருக்கிறது. கடந்த ஒரு ஆண்டாக கலைத்தாயும், அரிச்சந்திரனும் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது.
அவ்வபோது அரிச்சந்திரனிடம் இருந்து கலைத்தாய் பணம் வாங்கி வந்தாராம். இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரிச்சந்திரனிடம் கலைத்தாய் ரூ.2 லட்சம் கடனாக பெற்றுள்ளார்.ஆனால் அந்த பணத்தை அவர் திருப்பி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பணத்தை அரிச்சந்திரன் கேட்டுள்ளார். ஆனால் அவர் சரியாக பதில் அளிக்காததுடன், திடீரென வேலையை விட்டும் நின்று விட்டார் கலைத்தாய்.
இதையடுத்து அரிச்சந்திரன் கலைத்தாயை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றும், அவர் போனை எடுக்கவில்லை. அப்போதுதான் கலைத்தாய்க்கு வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், அதனால் தன்னிடம் பேசவில்லை என்றும் அரிச்சந்திரன் நினைத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அரிச்சந்திரன், கலைத்தாயை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.
இதுகுறித்து தனது உறவினரான புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த தீத்துவாசல் பட்டியை சேர்ந்த 30 வயதாகும் பிரசாந்த் என்பவரிடம் கூறி உதவி கேட்டாராம். பின்னர் 2 பேரும் சேர்ந்து, கலைத்தாயை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டினார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, கலைத்தாயின் மாமனார் இறந்து விட்டார். இதையடுத்து கலைத்தாய் தனது கணவருடன் அரியலூர் செந்துறை அருகே உள்ள கிராமத்திற்கு சென்றிருக்கிறார்.
அதன்பின்னர் கலைத்தாய் மட்டும் கடந்த ஜனவரி 13-ந் தேதி கோவை துடியலூருக்கு வந்துள்ளார். அப்போது கலைத்தாய் தனியாக இருப்பதை அறிந்த அரிச்சந்திரன் தனது உறவினர் பிரசாந்துடன் அங்கு சென்றுள்ளார். அங்கு அவரிடம் தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டிருக்கிறார்.அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டதுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த அரிச்சந்திரன் தனது உறவினருடன் சேர்ந்து கத்தியால் கலைத்தாயை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.
இதில் அவருக்கு கழுத்து, தலை, முகம் உள்பட பல இடங்களில் வெட்டு விழுந்தது. பலத்த காயம் அடைந்த கலைத்தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்த துடியலூர் போலீசார் விரைந்து வந்து, பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோவை மாநகர வடக்கு துணை கமிஷனர் தேவ நாதன் நேரில் வந்து விசாரணை நடத்தினார். இதனிடையே கொலை தொடர்பான விசாரணைக்கு பின்னர் அரிச்சந்திரன், பிரசாந்த் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.