தேசிய அரசியலில் அண்ணாமலை".. பாஜக வழங்கப்போகும் புதிய பொறுப்பு என்ன தெரியுமா?

அரசியல்

தேசிய அரசியலில் அண்ணாமலை".. பாஜக வழங்கப்போகும் புதிய பொறுப்பு என்ன தெரியுமா?

சென்னை: தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்டுள்ளார். புதிய மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் செயல்பட உள்ளார்.

இந்நிலையில் தான் அண்ணாமலையை பாஜக தேசிய கட்டமைப்பில் பயன்படுத்தும் என்று நேற்று அமித்ஷா அறிவித்தார். இதனால் அண்ணாமலைக்கு தேசிய அளவில் முக்கிய பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் எந்த பொறுப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளது என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை செயல்பட்டு வந்தார். தற்போது அவர் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக - பாஜக மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணிக்கு இடையூறாக இருக்க கூடாது என்பதற்காக அண்ணாமலையிடம் இருந்து கட்சி தலைவர் பதவியை பாஜக மேலிடம் பறித்துள்ளது.

குறிப்பாக அண்ணாமலையை நீக்கினால் தான் கூட்டணி என்று அதிமுக தலைவர்கள் கூறியதாகவும், அதன்படியே அண்ணாமலை அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் அண்ணாமலைக்கு மாற்றாக தமிழக பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் செயல்பட உள்ளார். தலைவர் பதவிக்கு அவர் மட்டுமே நேற்று விருப்ப மனு அளித்தார். இன்று நயினார் நாகேந்திரன் பாஜகவின் மாநில தலைவராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளார்.

இருப்பினும் தமிழக பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள அண்ணாமலைக்கு தேசிய அளவில் முக்கிய பொறுப்பு என்பது வழங்கப்பட உள்ளது. இதனை நேற்றைய பிரஸ்மீட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதிப்படுத்தினார். மேலும் இதுதொடர்பாக அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில், ''தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் பொறுப்புக்கு நயினார் நாகேந்திரனிடம் இருந்து மட்டுமே பரிந்துரை பெறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை பாராட்டத்தக்க சாதனைகளை செய்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதாக இருந்தாலும் சரி, அல்லது கட்சியின் திட்டங்களை கிராமமம் கிராமமமாக எடுத்து செல்வதாக இருந்தாலும் சரி அண்ணாமலையின் பங்களிப்பு அளப்பறியது. கட்சியின் தேசிய கட்டமைப்பில் அண்ணாமலையின் நிறுவன திறன்களை பாஜக பயன்படுத்தும்'' என்று கூறியுள்ளார்.

இதனால் அண்ணாமலைக்கு பாஜக மேலிடம் தேசிய அளவில் முக்கிய பொறுப்பை வழங்கலாம் என்று கூறப்படுகிறது. அதன்படி பாஜகவின் அமைப்பு ரீதியான பதவி அண்ணாமலைக்கு வழங்கப்பட அதிக வாய்ப்புள்ளது. தற்போது பாஜகவில் தேசிய தலைவராக ஜேபி நட்டா உள்ளார். இவரது பதவிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் புதிய தேசிய தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார். இப்படியான சூழலில் அண்ணாமலைக்கு பாஜகவின் தேசிய தலைவர் பதவி கொடுக்கப்படலாம் என்று அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். ஆனால் தேசிய தலைவர் பதவி என்பது அண்ணாமலைக்கு கொடுக்க வாய்ப்பில்லை என்றே சொல்லப்படுகிறது.

அண்ணாமலைக்கு அரசியல் அனுபவம் குறைவு. பாஜகவில் சில ஆண்டுகளே பணியாற்றி உள்ளார். குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டுமே பணியாற்றி இருக்கிறார். வெளிமாநிலங்களில் அவர் பிரசாரம் செய்ய மட்டுமே சென்றுள்ளார். இதனால் தேசிய தலைவர் பதவி என்பது அவருக்கு கொடுக்கப்பட வாய்ப்பு என்பது இல்லை. மாறாக பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் பதவி என்பது வழங்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. பாஜகவை பொறுத்தவரை தேசிய பொதுச்செயலாளர் பதவியை அண்ணாமலைக்கு வழங்க அதிக வாய்ப்புள்ளது.

அதோடு அண்ணாமலைக்கு இப்போது 40 வயது தான் ஆகிறது. இதனால் பாஜகவின் தேசிய இளைஞர் அணி (யுவ மோர்ச்சா) தேசிய தலைவராக தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த பொறுப்பில் அண்ணாமலையின் நண்பரான பெங்களூர் தெற்கு லோக்சபா தொகுதியின் எம்பி தேஜஸ்வி சூர்யா செயல்பட்டு வருகிறார். இவருக்கு மாற்றாக அண்ணாமலையை அந்த பொறுப்பில் நியமிக்க பாஜக மேலிடம் முடிவு எடுக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

அண்ணாமலையை பாஜக மேலிடம் கட்சி சார்ந்து அமைப்பு ரீதியான பணிகளில் ஈடுபடுத்த தான் அதிக ஆர்வம் காட்டுகிறது. ஒருவேளை அண்ணாமலை அதனை விரும்பாத பட்சத்தில் அண்ணாமலையை தேசிய அரசியலில் ஈடுபடுத்துவதற்கு மாற்று வழியை பாஜக கையில் எடுக்கலாம். அதாவது தமிழகத்தில் கட்சியை வளர்த்த அவருக்கு பரிசாக இன்னொரு கிப்டு என்று அண்ணாமலைக்கு ராஜ்யசபா சீட் கொடுத்து மத்திய அமைச்சராக்கும் வாய்ப்பும் உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த முடிவு என்பது அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் அவர் போட்டியிட விரும்பாமல் இருந்தால் மட்டுமே சாத்தியம் என்கின்றனர் பாஜகவினர்.

மேலும் அண்ணாமலைக்கு வழங்கப்படவுள்ள பொறுப்பு குறித்து பா.ஜ.க.மேலிடம் முடிவெடுத்து வருவது குறிப்பிடதக்கதாகும்.

ஆசிரியர் & வெளியீட்டாளர்

மேட்டுப்பாளையம் Rafi ( MR ) 

செய்திகள் & விளம்பர தொடர்புக்கு

97 87 416 486