வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி அம்மன் அர்ஜுனன் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு.!
கோவை வடக்கு

கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருப்பவர் அம்மன் அர்ஜூனன். இவர் அதிமுகவில் கோவை மாநகர் மாவட்ட செயலாளராக உள்ளார்.
இவர் கடந்த 2016-2021 காலகட்டத்தில் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தார். இந்நிலையில் இன்று காலை முதல் அம்மன் அர்ஜூனன் சம்பந்தப்பட்ட இடங்களில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
செல்வபுரம் அசோக் நகர் பகுதியில் உள்ள அர்ஜூனன் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. தகவலறிந்த அதிமுகவினரும் அவரின் வீட்டு முன்பு சூழ்ந்துள்ளனர்.
லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருடன் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். முதல் தகவல் அறிக்கையின் படி, "21.5.2016 - 18.5.2022 காலகட்டத்தில் அம்மன் அர்ஜூனன் வருமானத்துக்கு அதிகளவில் சொத்து சேர்த்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி அம்மன் அர்ஜூனன் மற்றும் அவரின் மனைவி விஜயலட்சுமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வருமானத்தை விட சுமார் 71.19 சதவிகிதம் அதிகம் சொத்து சேர்த்துள்ளார். மேலும் தன் பெயர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் ஏராளமான சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளார்.
அம்மன் அர்ஜூனன் தன் மகன் கோபாலகிருஷ்ணன் பெயரில் ரூ.1 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளார். கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட உறவினர்கள் பல்வேறு நிறுவனங்களில் பங்குதாரர்களாக இருந்தனர். கோபாலகிருஷ்ணன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
இந்த காலத்தில் வீடு, நிலம், வாகனம், நகை, முதலீடு மொத்தமாக ரூ.8 கோடிக்கு மேல் சொத்து உள்ளது. சுமார் ரூ.3.8 கோடி வருவாய் வந்துள்ளது. கடன், வருமான வரி உள்ளிட்டவற்றுக்காக ரூ.2.97 கோடி செலவாகியுள்ளது. ரூ.2.75 கோடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கப்பட்டுள்ளது." என்று கூறப்பட்டுள்ளது.
அம்மன் அர்ஜூனன் வீட்டில் ரெய்டு நடத்துவதற்கு அதிமுக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்து அம்மன் அர்ஜூனன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "காலையில் வாக்கிங்கில் இருந்தேன். திடீரென்று வீட்டுக்கு வந்து விசாரணைக்கு அழைத்திருக்கிறார்கள்.
தற்போது வீடு முழுவதும் சோதனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். என்னிடம் வேறு எந்த தகவலும் கூறவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சோதனை நடத்துகிறார்கள். இது எப்போதோ எதிர்பார்த்த ஒன்றுதான்." என்றார் அம்மன் அர்ஜுனன்.
ஆசிரியர் & வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi ( MR )