அதிமுக கூட்டத்திற்கு சென்று திரும்பிய ஈச்சர் வாகனம் பிக்கப் வாகனத்தில் நேருக்கு நேர் மோதி விபத்து. ! காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து நிதியுதவி வழங்கிய திமுக எம்.எல்.ஏ.!
கிருஷ்ணகிரி

(14/08/2025) கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பேருந்து நிலையத்தில் கடந்த செவ்வாய்கிழமை மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்ட பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்தூர் அடுத்த மயிலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 35 க்கும் மேற்பட்டோர் ஈச்சர் வாகனத்தில் கூட்டம் முடிந்து ஊருக்கு திரும்பினர்.
அப்பொழுது மத்தூர் அடுத்த அத்திகானூர் கிராமம் வழியே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த பிக்கப் வாகனம் ஈச்சர் லாரியின் மீது மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த ஈச்சர் லாரி சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த சமயம் ஈச்சர் லாரியின் பின்னால் வந்த கார் ஒன்றும் லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஈச்சர் லாரியில் பயணம் செய்த 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மேலும் கார் மற்றும் பிக்கப் வாகனத்தில் இருந்தவர்களும் படுகாயம் அடைந்தனர். இதனை அடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக காயம் அடைந்தவர்களை அந்த வழியாக வந்த வாகனங்கள், கார் மற்றும் ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக அருகில் உள்ள மத்தூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் இதை அறிந்த கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன்.MLA கட்சி பாகுபாடின்றி விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் தன் தொகுதி பொதுமக்களை நேரில் சந்தித்து பழங்கள் வழங்கி ஆறுதல் கூறினார்.
மேலும் அவர்களின் மருத்துவ செலவுக்காக 1 லட்சம் ரூபாய் வழங்கினார்.
செய்தியாளர்
மாருதி மனோ