தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலின் பணிக்காலம் முடிந்தால் தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார் ?

TN - Police

தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலின் பணிக்காலம் முடிந்தால் தமிழகத்தின் அடுத்த டிஜிபி  யார் ?

சென்னை: தமிழ்நாட்டின் அடுத்த காவல்துறைத் தலைவர் (டிஜிபி) யார் என்பது குறித்த முடிவை முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதி செய்துவிட்டதாக அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டின் தற்போதைய டிஜிபியாக இருக்கும் சங்கர் ஜிவால், அடுத்த மாதம் தனது பணியிலிருந்து ஓய்வு பெறவுள்ளார்.

தேர்தல் நெருங்கி வருவதால், சங்கர் ஜிவால் தனக்கு பணி நீட்டிப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், அரசு புதிய ஒருவரை டிஜிபியாக நியமிப்பதில் உறுதியாக இருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே அடுத்த டிஜிபியை தேர்வு செய்வதற்கான பணிகளைத் தொடங்கிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார்?

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சங்கர் ஜிவால், 1990 ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஆவார். முதுகலைப் பொறியியல் பட்டம் பெற்ற இவர், தமிழ், ஆங்கிலம் மற்றும் உத்தரகாண்டின் குமாவுனி மொழியிலும் புலமை பெற்றவர். பொறியியல் படிப்பை முடித்ததும், செய்ல் (SAIL) மற்றும் பெல் (BHEL) போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் சில காலம் பொறியாளராகப் பணியாற்றினார்.

பின்னர், ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று தமிழகப் பிரிவில் அதிகாரியாகப் பொறுப்பேற்றார். சேலம் மற்றும் மதுரை மாவட்டங்களுக்கு காவல் கண்காணிப்பாளராகவும், மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் மண்டல இயக்குநராகவும், திருச்சி காவல் ஆணையராகவும், உளவுப் பிரிவின் டிஐஜி மற்றும் ஐஜி ஆகவும், சிறப்பு அதிரடிப் படையின் ஏடிஜிபி ஆகவும் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.

சங்கர் ஜிவாலின் பணிக்காலம் நிறைவு

சங்கர் ஜிவாலின் பணிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த டிஜிபியை தேர்வு செய்வதற்கான செயல்முறைகளை முதல்வர் ஸ்டாலின் இப்போதே தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. சந்​தீப் ராய் ரத்​தோர், ராஜீவ் குமார், சீமா அகர்வால் ஆகியோர் இந்தப் பதவிக்கான பட்டியலில் முன்னிலையில் உள்ளனர்.

வழக்கமாக, தமிழக அரசு தேர்வு செய்து அனுப்பும் பெயர்களை மத்திய உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்யும். தமிழக உள்துறை அதிகாரிகள் மற்றும் தற்போதைய டிஜிபி ஆகியோருடன் ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும். இந்தக் கலந்தாய்வுகளுக்குப் பிறகு, தகுதியானவர்களின் பட்டியல் வடிகட்டப்பட்டு மீண்டும் தமிழக முதல்வருக்கு அனுப்பப்படும்.

சந்​தீப் ராய் ரத்​தோர்

அந்தப் பட்டியலில் இருந்து முதல்வர் ஒருவரைத் தேர்வு செய்வார். இதற்காக சென்னை மற்றும் டெல்லியில் கூட விரிவான ஆலோசனைகள் நடைபெறும். அபய்குமார் சிங், வன்னி பெருமாள், சந்​தீப் ராய் ரத்​தோர், ராஜீவ் குமார், சீமா அகர்வால், வினித் தேவ் வான்கடே, மகேஷ்குமார் அகர்வால், வெங்கட்ராமன் என மொத்தம் எட்டு பெயர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இந்த எட்டு பேரில், சந்​தீப் ராய் ரத்​தோர், ராஜீவ் குமார், சீமா அகர்வால் ஆகிய மூன்று பெயர்கள் மத்திய அரசால் தமிழக முதல்வருக்குத் திருப்பி அனுப்பப்படும். அதில் இருந்து ஸ்டாலின் ஒருவரை இறுதி செய்வார். இந்தத் தேர்வில், சங்கர் ஜிவால் சில பெயர்களைப் பரிந்துரை செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்டாலினின் தேர்வாக சந்தீப் ராய் ரத்தோர் இருக்கவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இவர் முன்னாள் சென்னை மாநகர காவல் ஆணையர் மற்றும் 1992 ஆம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவைச் சேர்ந்தவர். சமீபத்தில், சந்தீப் ராய் ரத்தோர் சென்னை காவல் ஆணையர் பதவியிலிருந்து தமிழ்நாடு காவலர் பயிற்சி அகாடமிக்கு மாற்றப்பட்டார்.

இது, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குக்குப் பின் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும். இருப்பினும், இவர் மிகவும் திறமையான அதிகாரி என்பதால் முதல்வர் ஸ்டாலின் இவர் மீது சிறப்பு கவனம் செலுத்தி வருவதாக கூறப்பட்டது.

அபய் குமார் சிங்

ஆனால், தற்போது சந்தீப் ராய் ரத்தோரைத் தாண்டி, அபய் குமார் சிங்கை அடுத்த டிஜிபியாக நியமிக்க முதல்வர் ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் நெருங்கும் சூழலில், இவரை ஸ்டாலின் கருத்தில் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அடுத்த ஓராண்டு மிகவும் முக்கியமானது. ஆளும் கட்சிக்கு நம்பிக்கையான ஒரு நபர் இந்தப் பொறுப்பில் இருப்பது அவசியம். தேர்தல் பணிகளுக்கு மத்தியில் சட்டம் ஒழுங்கை திறம்பட நிர்வகிப்பது மிகவும் சவாலான ஒன்றாகும். இந்தச் சூழலில், அபய் குமார் சிங்கை இந்தப் பதவிக்கு கொண்டு வர முதல்வர் ஸ்டாலின் தீவிரமாக முனைப்பு காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.