அதிர்ச்சி கொடுத்த டெல்லி மக்கள்! தோல்வி குறித்து உருக்கமாக பேசிய கெஜ்ரிவால்!

இந்தியா

அதிர்ச்சி கொடுத்த டெல்லி மக்கள்! தோல்வி குறித்து உருக்கமாக பேசிய கெஜ்ரிவால்!

அதிர்ச்சி கொடுத்த டெல்லி மக்கள்! தோல்வி குறித்து உருக்கமாக பேசிய கெஜ்ரிவால்.

டில்லி: டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான கெஜ்ரிவாலே தோல்வி அடைந்து இருப்பது ஆம் ஆத்மி கட்சியினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

தேர்தல் தோல்வி தொடர்பாக பேசியுள்ள கெஜ்ரிவால், பாஜகவிற்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். மேலும், நாங்கள் அதிகாரத்திற்காக கட்சி தொடங்கவில்லை எனவும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி கட்சி சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அப்படியே பலித்தது போல டெல்லி தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பாஜக 48 இடங்களிலும் ஆம் ஆத்மி 22 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை தாண்டி பாஜக முன்னிலை பெற்றுள்ளது. இதனால், டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சி அமைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உருக்கத்துடன் பேசிய கெஜ்ரிவால்

டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்டிருந்த நிலையில், பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மாவுடன் போட்டியிட்டு தோல்வியை தழுவியுள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவாலே தோல்வியை தழுவியிருப்பது, ஆம் ஆத்மி கட்சியினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதனிடையே தோல்வி குறித்து தனது எக்ஸ் பதிவில் கெஜ்ரிவால் வீடியோ வாயிலாக உருக்கமாக பேசியுள்ளார். அதில் கெஜ்ரிவால் கூறியிருப்பதாவது:--

டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. மக்களின் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். மக்களின் தீர்ப்பே முக்கியமானது. பாஜகவிற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கொடுத்துள்ள மக்களின் எதிபார்ப்புகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு பாஜக செயல்படும் என்று நான் நம்புகிறேன். கல்வி, சுகாதாரம், குடி நீர், மின்சாரம் என பல்வேறு துறைகளில் மக்களுக்கு எண்ணற்ற பணிகளை ஆம் ஆத்மி கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொண்டது.

மக்களுக்காக தொடர்ந்து உழைப்போம்

டெல்லியின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் நாங்கள் முயற்சி செய்தோம். இனி ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக மட்டும் இன்றி சமூக துறைகளில் மக்களின் நலனுக்காகவும் தொடர்ந்து உழைப்போம். மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் நாங்கள் அரசியலுக்கு வந்தோம். அதிகாரத்திற்காக இல்லை. எனவே, மக்களுக்காக நாங்கள் எப்போதும் நிற்போம். தேர்தலில் கடுமையாக பணியாற்றிய ஆம் ஆத்மி தொண்டர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

அண்ணா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் முக்கிய பிரமுகராக விளங்கிய கெஜ்ரிவால், பின்னர் அரசியலில் குதித்தார். முன்னாள் வருவாய் துறை அதிகாரியான கெஜ்ரிவால், 2013 ஆம் ஆண்டு போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே டெல்லியில் மூன்று முறை முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்தை தோற்கடித்தார். அதன்பிறகு புதுடெல்லி தொகுதியில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த கெஜ்ரிவாலுக்கு இந்த தேர்தலில் பெரிய ஷாக் காத்திருந்தது.

பிரதமர் மோடி என்ன சொன்னார்

பாஜகவின் பர்வேஷ் வர்மாவிடம் 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளார். கெஜ்ரிவால் மட்டும் இன்றி மணீஷ் சிசோடியா, டெல்லி சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சவுரவ் பரத்வாஜ், மாளவியா தொகுதியில் போட்டியிட்ட சோம்நாத் பார்தி ஆகியோரும் தோல்வியை சந்தித்து உள்ளனர். தற்போது முதல்வராக இருக்கக் கூடிய அதிஷி மட்டுமே தப்பி பிழைத்துள்ளார்.

துவக்கத்தில் பின்னடைவை சந்தித்தாலும் கல்காஜி தொகுதியில் அதிஷி வெற்றி பெற்றுள்ளார். பாஜகவை பொறுத்தவரை டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்க உள்ளது. பாஜகவின் தேர்தல் பிரசாரத்தை முன்னின்று நடத்திய பிரதமர் மோடி, தேர்தல் வெற்றி குறித்து பேசியுள்ளார். மோடி கூறும் போது, "நல்ல நிர்வாகம், வளர்ச்சிக்கு கிடைத்த வெற்றி இது!" என கூறியுள்ளார்.