அண்ணா பல்கலை கழகத்தில் வேலை பார்க்கும் ஞானசேகரின் மனைவி. !
சென்னை

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனின் மனைவி பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வருகிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அமைச்சர் கோவி.செழியன், "மாணவி பாலியல் வன்கொடுமை எதிர்பாராத நிகழ்வு. எனினும் மாணவி புகார் கொடுத்த சிறிதுநேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 23ம் தேதி சம்பவம் நிகழ்ந்தது. 25ம் தேதி மாணவி புகார் அளித்ததும் குறுகிய நேரத்தில் அந்த நபர் கைது செய்யப்பட்டார். வழக்கில் விசாரணை தீவிரமடைந்துள்ளது.
தேசிய மகளிர் ஆணையமும் விசாரணை நடத்த உள்ளதாக சொல்லியுள்ளது. அதற்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு தரும். ஆனால், இந்த விஷயத்தை அரசியலாக்குகிறார்கள். மாணவியின் பிரச்சனையை நாங்கள் அரசியலாக்க விரும்பவில்லை.
சம்பவம் நடந்த நேரம் இரவு 8 மணி. குற்றவாளியான அந்த நபர் பல்கலைக்கழகத்துக்குள் அடிக்கடி வந்து செல்லும் பழக்கத்தை பெற்றுள்ளார். அவரின் மனைவி அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்காலிக வேலையில் பணிபுரிந்து வருகிறார். அதனால், சந்தேகத்தின் அடிப்படையில் கூட அவரை உள்ளே வரக்கூடாது என்று சொல்லும் சூழல் இருந்துள்ளது.
மேலும், பிரியாணி கடை வைத்திருப்பவர் என்பதால் மாணவர்கள் அவரிடம் உணவு வாங்குவதும் நடந்துள்ளது. பழக்கமான முகம் என்கிற அடைப்படையில் பல்கலைக்கழகத்துக்குள் வந்து சென்றுள்ளார் என்பது இங்குள்ள காவலர்கள் சொல்லும் செய்தி. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது. அவரது மனைவிக்கும் இதில் பங்கும் இருக்கிறதா என்பது விசாரணையின் முடிவில் உண்மை என்னவென்பது தெரியவரும்.
இதனை படிப்பினையாக எடுத்துக் கொண்டோம். அண்ணா பல்கலைக்கழகத்தில் 10 நாட்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்படும். இனி உரிய அடையாள அட்டை இல்லாமல் யாரையும் நுழைய விடக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளோம்.
100க்கு 80 சதவிகிதம் சிசிடிவி கேமராக்கள் சரியாக வேலை செய்கின்றன. ஆனால், சம்பவம் நடந்த இடம் சிசிடிவி இல்லாத முட்புதர் பகுதி. இப்போது முட்புதர்களை அகற்றும் பணி நடந்து வருகிறது. ஓரிரு நாட்களில் முட்புதர் அகற்றப்பட்டுவிடும்." என்று தெரிவித்துள்ளார்.