அன்புமணி மற்றும் இராமதாஸ் இடையே மோதல். ! ஏன்?

அரசியல்

அன்புமணி மற்றும் இராமதாஸ் இடையே மோதல். ! ஏன்?

பாமக பொதுக்குழுவில், கட்சியின் இளைஞர் அணி தலைவர் நியமனம் தொடர்பாக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் வெடித்துள்ளது. 

இளைஞர் அணி தலைவர் பதவி விவகாரத்தில் இருமுறை அன்புமணி தந்தைக்கு எதிராக கோபத்தை வெளிப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

பாமக பொதுக்குழு கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்ற நிலையில் தற்போது மோதலில் முடிவடைந்து இருக்கிறது. கட்சியின் இளைஞரணி தலைவராக தனது மகள் காந்திமதியின் மகன் முகுந்தன் பரசுராமன் நியமிக்கப்படுவதாகவும், அவர் அன்புமணிக்கு உதவியாக இருப்பார் என மேடையில் அறிவித்தார் ராமதாஸ்.

ஆனால், "எனக்கு உதவியாகவா வேண்டாம்.. அவன் கட்சியில் சேர்ந்தே நாலு மாசம் தான் ஆகுது.. அவனுக்கு பதவியா" என கோபத்தை வெளிப்படுத்தினார் அன்புமணி.

அப்போது, "இது என் கட்சி நான் சொல்வதைத் தான் கேட்க வேண்டும்.. விருப்பமல்லவர்கள் இருக்கலாம்.. இல்லையென்றால் வெளியே போகலாம்" என கோபத்தை வெளிப்படுத்தினார் ராமதாஸ். அப்போது மேடையில் இருந்து எழுந்த அன்புமணி, பனையூரில் தான் புதிதாக கட்சி அலுவலகம் ஆரம்பித்திருக்கிறேன். அங்கு வந்து என்னை சந்திக்கலாம்.. என கூறி மைக்கை தூக்கி எறிந்து விட்டு கிளம்பி சென்றார். அவருடன் மேலும் பல நிர்வாகிகளும் புறப்பட்டு சென்றனர்.

சிலர் ராமதாஸ் தான் கட்சியின் நிறுவனர் எனக் கூறி பொதுகுழுவிலேயே கலந்து கொண்டிருக்கின்றனர். ராமதாஸின் மகளான காந்திமதியின் மகன் தான் முகுந்தன். தனது அக்காவின் மகனுக்கு பதவி கொடுப்பதை விரும்பாத அன்புமணி கோபமாக புறப்பட்டு சென்றது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பாமக நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இளைஞரணி தலைவர் பதவிக்காக ராமதாசை அன்புமணி எதிர்கொள்வது புதிது கிடையாது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, மத்திய அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் என பல பதவிகளை வகித்த அன்புமணி ராமதாஸ், கட்சியின் இளைஞரணி தலைவராகவும் இருந்து வந்தார். இந்நிலையில் கட்சியின் எதிர்கால நலன் கருதி பாட்டளி மக்கள் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஏற்கனவே பாமக தலைவராக இருந்த ஜிகே மணி கவுரவ தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அன்புமணி வகித்து வந்த இளைஞரணி தலைவர் பதவியை பெறப் போவது யார் என கேள்விகள் எழுந்தது.

இளைஞரணி தலைவர் பதவி என்பது அடுத்த தலைவர் போல் என்பதால் பல முக்கிய தலைவர்களும் காய் நகர்த்தி வந்தனர். இறுதியில் அதனை சாதித்துக் காட்டினார் ஜிகே மணி. தனது மகனும் திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டு வரும், லைகா நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஜிகேஎம் தமிழ்க்குமரனுக்கு பதவியை ராமதாஸ் மூலம் பெற்றார். அன்புமணிக்காக தலைவர் பதவியை விட்டுக் கொடுத்தார் என்பதற்காக அவரது மகனுக்கு இளைஞர் அணி தலைவர் பதவியை ராமதாஸ் கொடுத்ததாக கூறப்பட்டது.

தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை நேரில் சந்தித்து இளைஞரணி தலைவர் நியமன கடிதத்தையும் பெற்றுக் கொண்டார் இந்த நிலையில் அரசியலில் அவ்வளவாக ஈடுபடு காட்டாதவருக்கு இளைஞர் அணி தலைவர் பதவி கொடுத்திருப்பதை சில பாமக நிர்வாகிகள் விரும்பவில்லை. அதனை அன்புமணியும் ரசிக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. இதனால் கட்சியிலும், சொந்த சமுதாயத்தினர் மத்தியிலும் பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணிக்கு தர்ம சங்கடமான சூழல் உருவானது.

பாமக இளைஞரணித் தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில் அந்தப் பதவியை வேண்டாம் எனக் கூறி ராஜினாமா செய்துவிட்டு முழுக்க முழுக்க தனது தொழிலை கவனிக்கச் சென்றுவிட்டார் தமிழ்குமரன் ஜிகே மணி. இதனையடுத்து தற்போது வரை அந்த பதவி நிரப்பப்படாமல் இருந்த நிலையில், பாமக இளைஞரணித் தலைவர் பதவிக்காக பலரும் முட்டி மோதி வந்தனர். இந்த நிலையில், பேரனுக்கு ராமதாஸ் பதவி கொடுத்ததால், அன்புமணி கோபத்தை வெளிப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.