செப்டிக் டேங்க்கில் விழுந்து இறந்ததாக சொல்லப்படும் குழந்தை சாவில் மர்மம் என பெற்றோர் கதறியதால் பரபரப்பு.!

விக்கிரவாண்டி

செப்டிக் டேங்க்கில் விழுந்து இறந்ததாக சொல்லப்படும் குழந்தை சாவில் மர்மம் என பெற்றோர் கதறியதால் பரபரப்பு.!

விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கும் இசேவை மையத்தில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வருபவர் பழனிவேல். இவரது மனைவி சிவசங்கரி. இவர்களுக்கு மூன்றரை வயதில் லியா லட்சுமி என்ற குழந்தை இருந்தார்.

இந்த குழந்தை விக்கிரவாண்டி காவல் நிலையம் அருகே செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் எல்கேஜி படித்து வந்தார். இவர் 3ஆம் தேதி பள்ளிக்குச் சென்றார். அவரை பழனிவேல்தான் பள்ளியில் விட்டுவிட்டு தனது வேலைக்குச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் மதியம் 1.45 மணிக்கு சிறுமி சிறுநீர் கழிக்க வேண்டும் என கூறி ஆசிரியையிடம் சொன்னார். அவரும் சிறுமியை கழிப்பறைக்கு செல்ல அனுமதித்தார். ஆனால் நீண்ட நேரமாகியும் குழந்தை மீண்டும் வகுப்புக்கு வராததால், ஆசிரியைக்கு சந்தேகம் எழுந்து கழிப்பறையில் தேட சென்றார்.

அப்போது அங்கு இருந்த செப்டிக் டேங்க் மீது போடப்பட்டிருந்த துருப்பிடித்த இரும்பு மூடி உடைந்து காணப்பட்டதை கண்டார். உடனே பள்ளி ஓட்டுநர் கோபாலை அழைத்து செப்டிக் டேங்கில் தேட சொல்லியுள்ளனர்.

அப்போது அந்த செப்டிக் டேங்கில் சிறுமியின் ஷூ இருந்ததை கண்டறிந்தார். உடனே அங்கிருந்த கம்பியை எடுத்து குழந்தையின் ஆடையை பிடித்து இழுத்து மேலே தூக்கினார். பிறகு குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதில் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். இதையடுத்து சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இறந்த குழந்தையின் குடும்பத்திற்கு ரூ 4 லட்சம் நிவாரணமாக தமிழக அரசு வழங்கியது. அதை வாங்க பெற்றோர் மறுத்தனர்.

பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து உயிரிழந்ததாக சொல்லப்படும் குழந்தையின் கன்னத்தில் வீக்கம் இருப்பதாகவும் அவருடைய சீருடையில் ரத்தம் இருப்பதாகவும் பெற்றோர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

மேலும் குழந்தையை அடித்ததால் தான் இறந்துள்ளதாகவும், செப்டிக் டேங்க் ஓட்டை மிகச்சிறியதாக இருப்பதால் குழந்தை செப்டிக் டேங்கில் விழ வாய்ப்பில்லை எனவும் பெற்றோர் கதறல்.

மேலும் செப்டிக் டேங்கில் விழுந்திருந்தால் உடை நனைந்திருக்கும். ஆனால் உடை நனையவில்லை. மாறாக குழந்தையில் சட்டை மற்றும் டை ஆகிய பகுதிகளில் இரத்தக்கரை இருப்பதால் இறப்பில் மர்மம் இருப்பதாகவும் பெற்றோர் போராட்டம்.