சீமான் வீட்டை முற்றுகையிட சென்ற திராவிட கழகம் மற்றும் தோழமை இயக்கங்கள்.!

தமிழகம்

சென்னை: பெரியார் குறித்த எந்தவொரு ஆதாரமும் சீமானிடம் இல்லை. சீமான் கூறும் ஆதாரம் எல்லாம் பாஜகவினர் எழுதிய புத்தகங்கள்.

சீமான்தான் வீழ்ந்து விடாத வீரன், மண்டியிடாத மானம் என்று டயலாக் பேசுகிறாரே அப்போது தைரியமாக ஆவணத்தை பொது வெளியில் வெளியிடட்டும் என்று மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து சில கருத்துக்களை பேசியது தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சீமானின் தொடர் சர்ச்சை பேச்சால் சீமானின் வீடு இன்று முற்றுகை இடப்படும் என தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், மே 17 இயக்கம் உள்ளிட்ட பல்வேறு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு அறிவித்தது.

இதையடுத்து சீமான் வீடு உள்ள நீலாங்கரை முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து சீமானின் வீட்டை முற்றுகையிட வந்த பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெரியார் குறித்து அவதூறாக பத்திரிகையாளர் முன்புதான் பேசினார். அப்போது, அவர்கள் முன்பே பெரியார் தொடர்பான ஆதாரத்தைக் காட்ட வேண்டியதுதானே. டயலாக் பேசுவதற்கு மட்டும் பத்திரிகையாளர் சந்திப்பு. ஆனால் மன்னிப்பு கேட்பது மட்டும் நீதிமன்றத்திலா. பொது வெளியில் கேட்டால் சீமான் பதில் சொல்லமாட்டாரா. பதில் சொன்னால் என்ன பிரச்னை ஆகிவிடும்.

நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் ஆவணத்தை பொது வெளியில் வெளியிடட்டும். அது என்ன ரகசிய ஆவணமா. ரகசியமாக சீமானே தயாரித்து வைத்திருக்கிறாரா. நீங்கள்தான் வீழ்ந்து விடாத வீரன், மண்டியிடாத மானம் என்று டயலாக் பேசுகிறீர்கள். அப்போது தைரியமாக ஆவணத்தை பொது வெளியில் வெளியிடுங்கள்.

பெரியார் குறித்த அவதூறுக்கான எந்த ஆதாரமும் இல்லை. நாங்கள் அந்தப் புத்தகத்தை படித்துள்ளோம். சீமான் கூறும் ஆதாரம் எல்லாம் பாஜகவினர் எழுதிய புத்தகம். சீமானுக்கு புத்தகம் படிக்கும் பழக்கமே இல்லை. அண்ணாமலை 20 ஆயிரம் புத்தகம் என்று கதை விடுகிறார். சீமான் எந்த புத்தகமும் படிக்காமல் வாய்க்கு வந்ததை உளறுகிறார். இவர்களுக்கு எல்லாம் இதைப் பற்றி எந்தவொரு அக்கறையும் கிடையாது.

பிரபாகரன் குறித்து அவதூறு பேசுவது, விடுதலைப் புலிகளுக்கு எதிராக இழிவுபடுத்துவது, தந்தை பெரியாருக்கு எதிராக அவதூறு பரப்புவது இதுதான் அவர்களுடைய அரசியலாக இருக்கிறது. இதற்குப் பின்னரும் தமிழக மக்கள் அமைதி காக்க மாட்டார்கள். தமிழினத்திற்காக உழைத்த தலைவர்களை கொச்சைப்படுத்துவதை, அதை வைத்து சம்பாதிப்பதை, பிஜேபி, ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கு கூலி வேலை பார்ப்பதை தமிழக மக்கள் என்றைக்கும் அனுமதித்து நாங்கள் பார்த்ததில்லை. இவர்கள் நிச்சயமாக விரட்டி அடிக்கப்படுவார்கள்.

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மூத்த தலைவர் கோவை ராமகிருஷ்ணன் சீமானிடம் பெரியார் குறித்த ஆதாரத்தை கொடுக்குமாறு கேட்டார். ஆனால், சீமான் அதற்கான எந்தவிதமான பதிலையும் கூறவில்லை. அதற்குப் பின்னரும் தொடர்ந்து அவதூறு கருத்துகளைப் பேசி வருகிறார். இப்போது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அமைப்புகளும் சீமானிடம் கேள்வி கேட்பதற்காக வந்திருக்கிறோம்.

இதற்கும் சீமான் பதில் சொல்ல வரவில்லை என்றால் அடுத்தகட்டமாக எங்கு அரசியல் செய்கிறாரோ அந்த தேர்தல் களத்தில் அதற்கான எதிர்ப்பை தொடர்ச்சியாக தெரிவிப்போம். எந்தவொரு பிரச்னைகளுக்கும் சீமான் எதுவும் இதுவரை பேசவில்லை. இதுவரை எந்தவொரு பிரச்னைக்காகவும், சிக்கல்களுக்காகவும் மக்களுக்காக சீமான் வந்து நின்றது கிடையாது.

மீனவப் பிரச்னை முதல் ஜாதிப் பிரச்னை வரை எந்த மக்கள் பிரச்னைக்காகவும் அவர் வந்ததில்லை. ஆதரவு தெரிவிப்பது, அறிக்கை அளிப்பது, பத்திரிகையாளர் முன்பு தைரியம், வீரம், கொச்சை பேசுவதை தவிர சீமான் எதுவும் செய்யவில்லை. சீமானின் அச்ச உணர்வையும், கோழைத்தனத்தையும் அம்பலப்படுத்துவதே எங்கள் வேலை. சீமான் பாஜகவுடன் வெளிப்படையாக நிற்கிறார். சீமானுக்குப் பொய் செல்வது மட்டுமே வேலை என்றார்.