.அண்ணாமலை ஆடிய ஆடு-புலி ஆட்டம்? நயினார் நாகேந்திரனுக்கு செக்! புதிய தலைவர் யார்..?

சென்னை

.அண்ணாமலை ஆடிய ஆடு-புலி ஆட்டம்? நயினார் நாகேந்திரனுக்கு செக்! புதிய தலைவர் யார்..?

தமிழக பாஜக தலைவர் பதவிக்கு போட்டியிட குறைந்தது 10 வருடங்கள் கட்சியில் இருந்து இருக்க வேண்டும் என்ற புதிய விதியால், நயினார் நாகேந்திரன் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நயினார் நாகேந்திரனுக்கு எதிராக காய் நகர்த்தும் விதமாகவே இப்படியான ஒரு ரூல்ஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கான நிபந்தனையாக விதிக்கப்பட்டு இருக்கலாம் என்று பாஜகவினர் மத்தியில் பரபரப்பாக பேச்சு எழுந்துள்ளது.

தமிழக பாஜக தலைவர் மாற்றப்பட உள்ளார் என்பதே தமிழக அரசியல் வட்டாரத்தில் கடந்த சில வாரங்களாக ஓடிக்கொண்டு இருக்கும் ஹாட் டாபிக் ஆக உள்ளது. சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்கான சூழலை பாஜக ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அண்ணாமலையை மாற்றியே தீர வேண்டும் என அதிமுக தலைமை, அமித்ஷாவிடம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

புதிய பாஜக தலைவர் விருப்பமனு

இதையடுத்து தமிழக பாஜக தலைவரை மாற்றும் முடிவுக்கு தேசிய தலைமை வந்துள்ளது. புதிய தலைவர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை என்று அண்ணாமலை அறிவித்துவிட்டார். தமிழகம் முழுக்க தனது பயணம் இருக்கும் என்றும், தலைவராக இல்லாமல் கட்சி பணி செய்வேன் என்றும் அண்ணாமலை அறிவித்து உள்ளார். இதனால், பாஜகவின் புதிய தலைவராக யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், நயினார் நாகேந்திரன் பெயர் பலமாக அடிபட்டது.

அதிமுகவில் இருந்து வந்தவர், தென் மாநிலங்களில் செல்வாக்கு கொண்டவர் என்ற அடிப்படையில் நயினார் நாகேந்திரனுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படது. இதை ஊர்ஜிதம் செய்யும் வகையில் நயினார் நாகேந்திரனும் டெல்லி சென்று முகாமிட்டார். கட்சியின் மேலிட தலைவர்களை சந்தித்து தலைவர் பதவி தொடர்பாக ஆலோசனை நடத்துவதாகவும் சொல்லப்பட்டது. இந்த நிலையில்தான் தமிழக பாஜக தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பை அக்கட்சி வெளியிட்டது.

என்னென்ன ரூல்ஸ்கள்

அதில், மாநிலத் தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் வரவேற்கப்படுகிறது. மேற்கண்ட தேர்தலுக்கான விருப்ப மனுக்களை கட்சியின் இணையதளமான www.bjptn.com என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நாளை 11.04.2025, வெள்ளிக்கிழமை மதியம் 02.00 மணி முதல் மாலை 4 மணி வரை போட்டியிட விருப்பமுள்ளவர்கள் விருப்ப மனுவை மாநிலத் தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

* மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் படிவம் F பூர்த்தி செய்ய வேண்டும்.

* மூன்று பருவம் தீவிர உறுப்பினராகவும் மற்றும் குறைந்தது பத்து வருடங்கள் அடிப்படை உறுப்பினராகவும் உள்ளவர் மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட தகுதி பெறுவார்.

* இவரை கட்சியில் தேர்தெடுக்கப்பட்ட மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் 10 பேர் அவரிடம் இருந்து எழுத்து பூர்வமான ஒப்புதல் பெற்று பரிந்துரைக்க வேண்டும்.

* தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் படிவம் E பூர்த்தி செய்ய வேண்டும்.

* மாநில பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் முன் மொழிய மற்றொரு மாநில பொதுக்குழு உறுப்பினர் வழிமொழிய வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

அண்ணாமலையின் ஆடுபுலி ஆட்டம்?

மாநில தலைவர் பதவிக்கு 10 ஆண்டுகள் என்ற நிபந்தனையால் நயினார் நாகேந்திரன் தலைவர் பதவிக்கு போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் அவர் பாஜகவில் இணைந்து 8 ஆண்டுகளே ஆகியுள்ளன. நயினார் நாகேந்திரன் போட்டியிட முடியாதபடி விதிகள் வகுப்பட்டதில் அண்ணாமலையின் பங்கு இருக்காலாம் என்று அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

ஏனெனில், நயினார் நகேந்திரன் அதிமுகவிலிருந்து வந்தவர் என்பதால் அவர் தலைவர் ஆவதில் அண்ணாமலைக்கு விருப்பம் இல்லை என சொல்லப்படுகிறது. இதனால் அவருக்கு செக் வைக்கும் விதமாகவே 10 வருடம் என்ற விதியை அண்ணாமலை போட வைத்து இருக்கலாம் என்றும் நயினார் நாகேந்திரன் ஆதரவாளர்கள் மத்தியில் எழும் பேச்சாக இருக்கிறது. அண்ணாமலையை சமாதானப்படுத்தும் விதமாக அவரது கோரிக்கையை பாஜகவும் அப்படியே ஏற்று 10 வருடம் என்ற ரூல்ஸ் போட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

தென்காசியை சேர்ந்தவருக்கு தலைவர் பதவி?

தனக்கு 2 கண் போனாலும் பரவாயில்லை, எதிராளிக்கு 1 கண்ணாவது போகட்டும் என்ற பார்முலா படி அண்ணாமலை இந்த ஆடு - புலி ஆட்டத்தை ஆடிவிட்டதாகவும் பாஜகவினர் மத்தியில் பேச்சு எழாமலும் இல்லை. இதனால் பாஜகவின் புதிய தலைவராக தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த தொழிலதிபரும், தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்தவருமான

ஆனந்த் அய்யாசாமி என்பவர் தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாக பாஜகவில் பரபரப்பாகப் பேசப்படுகின்றது.