தமிழ்நாட்டு மீனவர்கள் பாதுகாப்பை வலியுறுத்தி எம்.பிக்கள் டெல்லியில் போராட்டம்
இந்தியா

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 07-02-2025 நிகழ்வுகள்
தமிழ்நாட்டு மீனவர்கள் பாதுகாப்பை வலியுறுத்தி எம்.பிக்கள் டெல்லியில் போராட்டம்
தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும் கைது செய்யப்படுவதும் அவர்களின் படகுகள் இலங்கை அதிகாரிகளால் கைப்பற்றப்படுவதும் வாடிக்கையான நிகழ்வாகிவிட்ட நிலையில் தற்போது இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த 97 மீனவர்களையும் பறிமுதல் செய்யப்பட்ட 216 மீன்பிடி படகுகளையும் விடுவிக்க கோரியும், மீனவர்கள் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மக்களைவையில் இவ்விவகாரத்தை விவாதத்திற்கு எடுக்குமாறு திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி எம்.பி அவையில் நேரமில்லா நேரத்தில் ஒத்திவைப்பு தீர்மானத்தை முன்வைத்தார்.
மேலும் இவ்விவகாரத்தில் மெத்தனமாக செயல்படும் ஒன்றிய அரசை கண்டித்து இன்று காலை 10:30 மணிக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் தமிழ்நாடு எம்.பிக்கள் நாடாளுமன்ற வாயிலில் போராட்டம் நடத்தினர். மீனவர்களை பாதுகாக்காமல் உறங்கும் ஒன்றிய அரசை கண்டித்தும் தமிழ்நாடு மீனவர்களை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்றும் பதாகைகளை ஏந்தி அவர்கள் முழக்கமிட்டனர்.
போராட்டத்தின்போது பத்திரிக்கையாளர்களை சந்திந்த திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி பேசியதாவது:
இலங்கை கடற்படை தொடர்ந்து தமிழ்நாட்டு மீனவர்களை கைது செய்வதும் துன்புறுத்துவதும் வாடிக்கையாகிவிட்டது. தற்போதுகூட தொண்ணூற்றி ஏழு மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். எங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அமைச்சருக்கும் - பிரதமருக்கும் கடிதம் எழுதியிருக்கிறார், அவர் இங்கே வரும்போதெல்லாம் தொடர்ந்து பிரதமரிடம் மீனவர்கள் பாதுகாப்பிற்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தியிருக்கிறார்.
இதுவரை இருநூற்றி பத்து படகுகளை இலங்கை கடற்படையினர் எடுத்துச் சென்றுள்ளனர். படகில்லாமல் மீனவர்கள் என்ன செய்வார்கள்? எங்கள் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. தற்போது தமிழ்நாட்டில் இது மிகப்பெரிய பிரச்சினை. ஒன்றிய அரசு மீனவக் குழுக்களுடன் கலந்தாய்வு செய்து பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண குழு அமைப்பதாக உறுதியளித்திருந்தது. ஆனால் அதற்கான எந்த முயற்சியும் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை.
தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் மீனவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்களின் படகுகளை திருப்பிக் கொடுக்க வேண்டும். எங்கள் மீனவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். ஒன்றிய அரசு உடனடியாக அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் முதலமைச்சர் வலியுறுத்தியிருப்பதை போல் இப்பிரச்சினைக்கு ஒன்றிய அரசு இலங்கை அரசுடன் பேசி நிரந்தரத் தீர்வு காண வேண்டும் எனவும் தெரிவித்தார்.
ஆசிரியர் & வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் ரபி ( MR)
தொடர்புக்கு
97 87 416 486