அயோத்தியில் மசூதிக்காக வழங்கப்பட்ட நிலம் திரும்பபெற வேண்டும்! உ.பி முதல்வருக்கு கடிதம்!

இந்தியா

அயோத்தியில் மசூதிக்காக வழங்கப்பட்ட நிலம் திரும்பபெற வேண்டும்! உ.பி முதல்வருக்கு கடிதம்!

உத்தர பிரதேசம்: அயோத்தியில் மசூதிக்கட்ட வழங்கப்பட்ட நிலத்தை திரும்பப்பெற வேண்டும் எனக் கூறி முதல்வர் யோகி ஆதித்தியநாத்திற்கு அம்மாநில பாஜக நிர்வாகி ரஜ்னீஷ் சிங் கடிதம் எழுதியுள்ளார். 

ராமர் பிறந்த இடமாக கருதப்படும் அயோத்தியிலிருந்த 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த இடம் யாருக்கு சொந்தம் எனும் சர்ச்சையான வழக்கிற்கு, கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி அந்த இடம் ஹிந்துக்களுக்கு சொந்தமானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

மேலும், இடிக்கப்பட்ட மசூதியை மீண்டும் கட்டிக்கொள்ள அயோத்தியில் 5 ஏக்கர் பரப்பளவிலான நிலம் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து அம்மாவட்டத்தின் தன்னிப்பூர் பகுதியில் அம்மாநில அரசினால் வழங்கப்பட்ட நிலத்தில், மசூதி கட்ட இஸ்லாமிய வக்பு வாரியத்தின் சார்பில் இந்தோ-இஸ்லாமிய கலாச்சார அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது.

இந்நிலையில், பாஜக நிர்வாகி ரஜ்னீஷ் சிங் கடந்த டிச.10 அன்று உத்தரப் பிரதேச முதல்வருக்கு எழுதியுள்ள கடித்தில், அந்த இடத்தில் மசூதியை கட்ட இஸ்லாமியர்கள் தரப்பிலிருந்து எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், இஸ்லாமிய அமைப்பைச் சார்ந்தவர்கள் அந்த நிலத்தை தங்களது சொந்த வேலைகளுக்கு பயன்படுத்திக்கொள்வதாகவும், மசூதியை கட்டுவது அவர்களது நோக்கமில்லை எனவும் மாறாக, அதன் போர்வையில் சமூக சூழலை சீர் அடையாமல் வைத்திருப்பதே அவர்களது நோக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவர்கள் தொழுவதற்கு மசூதி முக்கியமன்று எனவும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் படி, அந்த நிலத்தை அவர்கள் பயன்படுத்த வலியுறுத்துமாறும் அவ்வாறு அவர்கள் பயன்படுத்தவில்லை என்றால் அந்த நிலத்தை அரசு திரும்பப் பெற வேண்டும் எனவும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து தற்போது அவர் கூறுகையில், இஸ்லாமிய சமூகத்தினர் அந்த மசூதியின் மூலமாக பாபரின் புகழை பாதுகாக்க முயற்சிப்பதாகவும், அவர்கள் பாபர் மசூதி என்ற பெயரில் இந்துக்களின் மத உணர்வை புண்படுத்த நினைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக ரஜ்னீஷ் சிங் 2022 ஆம் ஆண்டு, தாஜ் மஹால் ஒரு பழமையான சிவன் கோயில் எனவும் அதன் உண்மையான பெயர் தேஜோ மஹாலயா என்று உரிமைக்கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.