பாஜக அதிக இடங்களை பிடித்தாலும் ஷிண்டேவைதான் முதல்வராக்கும்! காரணம் இதுதான்

பாஜக அதிக இடங்களை பிடித்தாலும் ஷிண்டேவைதான் முதல்வராக்கும்! காரணம் இதுதான்
ஏக்நாத் ஷிண்டே

மும்பை: மகாராடிஷ்ராவில் சட்டப்பேரவை தேர்தலின் போது பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே தேவேந்திர பட்னாவிஸைதான் முதல்வர் ஆக்கும் பிளானில் பாஜக இருந்தது. 

ஆனால் இந்த முறை இக்கட்சி பெரும்பான்மை பெற்றாலும் கூட, ஷிண்டேவைதான் முதல்வராக நியமிக்கும் என்று சொல்லப்படுகிறது. ஏன் கூட்டணி கட்சி தலைவரை பாஜக முதல்வர் ஆக்க யோசிக்கிறது? என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

மகாராஷ்டிராவை பொறுத்தவரை என்னதான பாஜக அதிகமான இடங்களை வென்றிருந்தாலும், அது சிவசேனா மண். கட்சியின் வளர்ச்சிக்காக பால் தாக்ரே ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்திருந்தார். பாஜகவை விட சித்தாந்த ரீதியாக சிவசேனா மகாராஷ்டிராவில் வலுவாக காலுன்றி இருக்கிறது. எனவேதான் ஷிண்டே தனியாக பிரிந்து சென்றாலும் கூட சிவசேனா என்கிற பெயரை அவர் விட்டுக்கொடுக்காமல் இருக்கிறார். இது இம்மாநிலத்தின் அரசியல் நிலவரம்.

இதில் பாஜகவின் பிளான் ஆட்சியை பிடிப்பது மட்டுமல்ல.. அதை நீண்ட காலத்திற்கு தக்கவைத்துக்கொள்வதும் தான். எனவே அதற்கேற்றவாறு கட்சி காய் நகர்த்தி வருகிறது.

இந்த பிளானின் ஓர் அங்கம்தான் சிவசேனாவை உடைப்பது. அதாவது ஷிண்டேவை வைத்துக்கொண்டு, அக்கட்சிக்குள் இருக்கும் எம்எல்ஏக்களை வெளியே கொண்டு வருவதன் மூலம் கட்சியை சித்தாந்த ரீதியாகவும், வலுவான தலைவர் இல்லாததாகவும் ஆக்க பாஜக முயன்றதாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

சமீபத்தில் மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது, முதல்வராக தங்கள் கட்சியை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸைதான் நியமிக்க பாஜக முடிவெடுத்திருந்தது. இதற்கான பணிகள் எல்லாம் நடந்தன. ஆனால், கட்சியின் வியூக வகுப்பாளர்கள் சிலர் இதற்கு மாற்று யோசனை கூறியிருந்தனர். இதை ஏற்றுக்கொண்ட தலைமை, பட்னாவிஸ்க்கு பதில் ஷிண்டைவை முதல்வராக்கியது. இந்த முறையும் இதேதான் நடக்கும் என்று சொல்லப்படுகிறது.

காரணம் சிவசேனா எனும் சித்தாந்தம்தான். மகாராஷ்டிராவில் பாஜக சார்பில் முதல்வர் நியமிக்கப்பட்டால், உத்தவ் சிவசேனாவுக்கும், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸுக்கு கொண்டாட்டமாக அமைந்துவிடும். ஏனெனில், இவர்களின் பிரதான எதிரி பாஜகதான். இந்த எதிர்ப்பு அரசியல் மேற்குறிப்பிட்ட கூட்டணியை வலுப்படுத்தும். குறிப்பாக சிவசேனா மேலும் ஆழமாக விரிவடையும். இப்படி மட்டும் நடந்துவிட்டால் அதிகபட்சமாக 2 தேர்தல்களை பாஜக தாண்டாது. மூன்றாவது தேர்தலில் சிவசேனா மூர்க்கமாக ஆட்சியை பிடித்துவிடும்.

ஆக இதை சரி செய்ய பாஜகவிடம் இருக்கும் ஒரே துருப்பு சீட்டு, ஷிண்டேதான். முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்பதை போல, ஷிண்டே சிவசேனாவை வைத்து இதுதான் உண்மையான சிவசேனா என்று கூறுவதன் மூலம், உத்தவ் தாக்ரேவின் சிவசேனாவை காலி செய்ய முடியும். எனவேதான் ஷிண்டேவை இந்த முறையும் முதல்வராக்க பாஜக அனுமதிக்கும் என்று சொல்லப்படுகிறது.

எது எப்படியிருந்தாலும் தேர்தல் முடிவுகள் முழுமையாக வந்த பின்னரே என்ன நடக்கும் என்பது தெரிய வரும்.