போலீஸ் தடியடி நடத்தியதும் பறந்தோடிய பிரசாந்த் கிஷோர்.! மாணவர்கள் கொந்தளிப்பு.!
பீகார்

பீகாரில் சமீபத்தில் நடந்த போட்டி தேர்வுகளில் முறைகேடு நடந்ததாகவும் அதை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
இது அங்கு பகீர் கிளப்பியுள்ள நிலையில், தடியடி சமயத்தில் மட்டும் பிரசாந்த் கிஷோர் அங்கிருந்து கிளம்பிவிட்டதாகச் சொல்லி மாணவர்கள் அவருடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பீகாரில் போட்டி தேர்வுகளில் மோசடி நடப்பதாக நீண்ட காலமாகவே குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. அப்படிதான் கடந்த 13ம் தேதி நடந்த அரசுப் பணியாளர் தேர்வு ஆணைய தேர்விலும் மோசடி நடந்ததாகப் புகார் எழுந்தன.
தேர்வுகளில் கேள்வித்தாள் முன்கூட்டியே லீக் ஆனதாகவும், உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும் கூறி, அங்குள்ள மாணவர்கள் தீவிர போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். கடந்த சில நாட்களாக இந்த போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் மாணவர்கள் திரண்டனர். பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இல்லம் நோக்கி பேரணியாகச் செல்வதே அவர்கள் திட்டமாக இருந்தது.
இந்த போராட்டத்திற்கு முன்னாள் தேர்தல் ஆலோசகரும் ஜனசுராஜ் கட்சியின் தலைவருமான பிரசாந்த் கிஷோர் ஆதரவு தெரிவித்தார். அவர் நேற்றைய தினம் இந்த போராட்டத்தில் பங்கேற்றும் இருந்தார். இதற்கிடையே மாணவர்கள் அனுமதியின்றி போராட்டம் நடத்துவதாகச் சொல்லி நேற்றிரவு திடீரென மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் மாணவர்கள் பலரும் காயம் அடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மாணவர்கள் மீதும், பிரசாந்த் கிஷோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
போராட்டத்தின் போது இருந்த பிரசாந்த் கிஷோர், சரியாகத் தடியடி நடந்தபோது அங்குக் களத்தில் இருந்து மாயமாகியிருந்தார். இதுவும் மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன் காரணமாகப் போராட்ட களத்திற்கு வந்த பிரசாந்த் கிஷோரை அங்கிருந்து கிளம்பும்படி மாணவர்கள் கூறினர். மேலும், பிரசாந்த் கிஷோருக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர்.
இதில் கோபமடைந்த பிரசாந்த் கிஷோர், "எங்களிடம் உதவிகளை வாங்கிக்கொண்டு இப்படி திமிராக நடந்து கொள்வது சரியா!" என்று கேள்வி எழுப்பினார். அவர் இப்படி கேள்வி எழுப்பியதும் அங்கிருந்த மாணவர்கள் கோபம் அடைந்தனர். ஏற்கனவே தடியடி தாக்குதலால் கோபத்தில் இருந்த மாணவர்களுக்கு இது மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
ஆவேசமான மாணவர்கள், "தடியடியின் போது எங்குப் போனீர்கள்?" என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பினர். இதனால் அங்குப் பதற்றம் ஏற்பட்ட நிலையில், பிரசாந்த் கிஷோர் அங்கிருந்து கிளம்பினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு கிளம்பி அரசியலில் பேசும் பொருளாக மாறியுள்ளது.