புதினுக்கு வார்னிங்.. போரை நிறுத்தாவிட்டால் பெரிய பிரச்சனையை ரஷ்யா சந்திக்கும் - டிரம்ப் அதிரடி.!
உலகம்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் நேற்று பதவியேற்றார். இதையடுத்து அவர் ரஷ்யாவுக்கும், அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் புதினுக்கும் வார்னிங் செய்தார்.
விளாடிமிர் புதின் ரஷ்யாவை சிதைத்துவிட்டார். உடனடியாக அவர் போர் நிறுத்தம் செய்வதற்கான டீலை மேற்கொள்ள வேண்டும். அதுதொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறேன். இல்லாவிட்டால் ரஷ்யா பெரிய பிரச்சனையை சந்திக்கும் என்று எச்சரித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபராக இருந்த கமலா ஹாரிஸ் போட்டியிட்டார். அதேபோல் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிட்டார். இதில் கமலா ஹாரிசை வீழ்த்தி டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார்.
இதையடுத்து டொனால்ட் டிரம்ப் நேற்று முறைப்படி அமெரிக்காவின் அதிபராக பதவியேற்றார். நேற்று வாஷிங்டன் டிசியில் உள்ள அமெரிக்காவின் நாடாளுமன்றத்தின் கேபிடல் கட்டிடத்தில் உள்ள ரோட்டுண்டா அரங்கில் நடைபெற்ற விழாவில் அதிபராக டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை அதிபராக ஜேடி வான்ஸ் ஆகியோர் பதவியேற்று கொண்டனர். இருவருக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
இந்த பதவியேற்பு விழாவை தொடர்ந்து டொனால்ட் டிரம்ப் தனது அதிபர் அலுவலகமான ஓவலுக்கு சென்றார். அங்கு அவரிடம் பத்திரிகையாளர்கள் ரஷ்யா- உக்ரைன் போர் தொடர்பான கேள்விகளை எழுப்பினார். அதற்கு டொனால்ட் டிரம்ப் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
''அவர் (விளாடிமிர் புதின்) போர் நிறுத்தம் தொடர்பான டீலுக்கு ஒப்புக்கொள்ள வேண்டும். அவர் போர் நிறுத்தம் ஒப்பந்தம் செய்யாமல் ரஷ்யாவை சிதைத்து வருகிறார். இதனால் ரஷ்யா பெரிய பிரச்சனையை எதிர்கொள்ளும் என்று நான் நினைக்கிறேன். நான் அவருடன் நல்ல உறவில் இருக்கிறேன். இதனால் அவர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை விரும்புவார் என்று நினைக்கிறேன்.
அதிகமான மக்கள் போர் என்பது ஒரு வாரத்தில் முடிந்துவிடும் என்று நினைக்கின்றனர். போரை முடிவுக்கு கொண்டு வந்தால் அவர் நல்லவர் என்று நான் நினைக்கிறனே'' என்று கூறியுள்ளார். முன்னதாக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றவுடன் விளாடிமிர் புதின் வாழ்த்து தெரிவித்தார்.
இதுதொடர்பாக ரஷ்யா பாதுகாப்பு கவுன்சில் மீட்டிங்கில் விளாடிமிர் புதின் பேசும்போது, '' அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கும் டொனால்ட் டிரம்புக்கு நாங்கள் வாழ்த்து தெரிவிக்கிறோம். அமெரிக்காவுடன் சமமான, பரஸ்பர மரியாதை அடிப்படையில் கட்டமைக்கப்படும் உரையாடலுக்கு ரஷ்யா தயாராக இருக்கிறது. அதேவேளையில் எங்கள் நாட்டு மக்களின்நலனை பாதுகாக்கும் வகையில் சண்டையை தொடரும். அதுதான் ராணுவ சிறப்பு நடவடிக்கையின் குறிக்கோளாக உள்ளது'' என்றார்.
இதன்மூலம் உக்ரைன் மீதான போரை ரஷ்யா தொடரும் என்பதை மறைமுகமாக விளாடிமிர் புதின் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தான் ரஷ்யாவுக்கு டொனால்ட் டிரம்ப் வார்னிங் விடுத்துள்ளார். முன்னதாக போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை தயாராக இருப்பதாக விளாடிமிர் புதின் சில வாரங்களுக்கு முன்பு தெரிவித்து இருந்தார். அதேபோல் டொனால்ட் டிரம்பும் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கூறியிருந்தது இங்கே கவனிக்கத்தக்கது.