தெலுங்கு தேசம் பாஜக மோதல் முற்றுகிறது - ஆட்சிகளுக்கு ஆபத்து

தெலுங்கு தேசம் பாஜக மோதல் முற்றுகிறது - ஆட்சிகளுக்கு ஆபத்து

ஆந்திராவில் சந்திரபாபு தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.அவருடைய ஆட்சியில் கூட்டணிக்கட்சித் தலைவரான பவன் கல்யாண் துணை முதலமைச்சர் பொறுப்பில் இருக்கிறார்.அவர், பஞ்சாயத்து ராஜ், வனத்துறை, சுற்றுச்சூழல் துறை ஆகிய துறைகளைக் கவனிக்கிறார்.

பவன் கல்யாண் தனது சொந்த தொகுதியான பிதாபுரத்தில் ரூ5.52 கோடி மதிப்பில் நலத்திட்டம், வளர்ச்சி பணிகளுக்கு நவம்பர் 3 அன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியபோது…

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால் மட்டுமே வளர்ச்சி பெற முடியும்.எங்கு பார்த்தாலும் பாலியல் பலாத்காரம், பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் நடைபெற்று வருவது கவலை அளிக்கிறது. போலீசார் குற்றவாளிகளை கைது செய்யாமல் உள்ளனர். சாதி, மதம் குற்றவாளிகளுக்குக் கிடையாது. தவறு செய்தால் தண்டனை கிடைக்க வேண்டும். யாராக இருந்தாலும், உறவினர் என்றும் இரத்த பந்தம் எனக் கூறி வந்தால் தவறு செய்திருந்தால் அவர்களையும் சேர்த்து அடித்து உதையுங்கள். டிஜிபி, எஸ்பி, கலெக்டர்களுக்கு கூறுகிறேன் தவறு செய்தவர்களைத் தண்டிக்க வேண்டும். ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் அதிகாரிகள் மத்தியில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.

உள்துறை அமைச்சராக உள்ள அனிதாவும் பெரிய அளவில் எந்த மாற்றமும் செய்யாமல் அமைதியாக உள்ளார். நான் உள்துறை அமைச்சராகப் பதவி ஏற்றால் வேறு மாதிரி இருக்கும். என்னை அந்த நிலைக்குக் கொண்டு வர வேண்டாம். தேவைப்பட்டால் உள்துறை அமைச்சர் பொறுப்பையும் நானே ஏற்பேன். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை கிடைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டணிக் கட்சித் தலைவராகவும் துணைமுதலமைச்சராகவும் இருந்து கொண்டு அவர் இவ்வாறு விமர்சித்திருப்பது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் ஜமியத் உலேமா-இ-ஹிந்த் அமைப்பினர் ஏற்பாடு செய்த 'சம்விதான் பச்சாவோ சம்மேளன்' என்ற கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர் நவாப் ஜான் பேசுகையில்,

ஒன்றிய அரசு வக்பு சட்ட வாரிய மசோதாவை கொண்டு வர முயற்சித்து வருகிறது. அந்த முயற்சியை முறியடிக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு மதச்சார்பற்ற சிந்தனை கொண்டவர்.

அவருக்கு இந்துக்களும், முஸ்லிம்களும் இரு கண்கள். அதனால் ஒரு கண்ணுக்குப் பாதிப்பு ஏற்பட்டாலும், அது முழு உடலுக்கும் ஏற்பட்ட பாதிப்பைப் போன்று உணருவார். எனவே எந்தச் சூழலிலும் முஸ்லீம்களுக்கு எதிரான வக்பு வாரிய சட்ட மசோதாவை நிறைவேற்ற அவர் அனுமதிக்கமாட்டார் என்றார்.

மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை பலத்தை இழந்த பாஜக, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஒன்றியத்தில் ஆட்சியமைத்து உள்ளது.

இந்தக் கூட்டணிக்கு தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி போன்ற கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதனால் கூட்டணி அரசின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் வக்பு வாரிய சட்ட மசோதாவை ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்தால், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் போன்ற கூட்டணிக் கட்சிகள் எதிர்க்கும் என்பதால் மோடி தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வ்க்பு சட்ட முன்வடிவை சந்திரபாபு எதிர்க்கிறார் என்பதால் தான் பவன் கல்யாணை தன்வசப்படுத்திக் கொண்டு சந்திரபாபு ஆட்சிக்கே சிக்கலை ஏற்படுத்த பாஜக முயல்வதாகவும் அதன் எதிரொலியாகவே பவன் கல்யாண் தெலுங்குதேசம் அமைச்சரை வெளிப்படையாக விமர்சித்திருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

சந்திரபாபு மற்றும் மோடி மோதல் மேலும் முற்றுமா அல்லது இருவருக்கும் சமரசம் ஏற்படுமா என்பது போகப்போகத் தெரியும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.மோதல் முற்றினால் ஒன்றிய ஆட்சி மற்றும் ஆந்திரா ஆட்சி ஆகிய இரண்டுக்குமே ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு எனவும் சொல்கிறார்கள்.