கோவையில் ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட இருவரை போலீஸார் கைது செய்தனர்.!
கோவை

கோவையில் ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட இருவரை போலீஸார் கைது செய்தனர்.
கோவையில் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கடந்த 11ம் தேதி 7 பேரை கோவை காட்டூர் போலீஸார் கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து ரூ.1.09 கோடி பணம், 7 செல்போன்கள், 2 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சூழலில், செல்வபுரத்தில் ஐ.பி.எல் சூதாட்டத்தில் ஒரு கும்பல் ஈடுபட்டுள்ளதாக காவல் ஆணையர் ஏ.சரவண சுந்தருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து தனிப்படையினர் செல்வபுரத்தில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பொன்னைய ராஜபுரம் அருகே நேற்று செல்போன்களை வைத்து ஆன்லைனில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரீதர் (39), பால கிருஷ்ணன் (39) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒன்றரை லட்சம் ரூபாய், ஒரு சொகுசு கார், இருசக்கர வாகனம், 2 விலை உயர்ந்த செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "வெப்சைட் லிங்க் மூலம் இவர்கள் இணைந்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பணம் கட்டி சேரும் உறுப்பினர்களுக்கு, மேற்கண்ட நபர்கள் புள்ளிகளை அளிப்பர். அதைப் பயன்படுத்தி அவர்கள் பிடித்த அணியை தேர்வு செய்து விளையாடுவர்.
ஐ.பி.எல் கிரிக்கெட்டில் எந்த அணி வெற்றி பெறும் ? எந்த அணியின் வீரர் அதிக ரன்களை குவிப்பார், யார் அதிக விக்கெட்டுகளை வீழ்த்துவார், எந்த பந்தில் சிக்சர் அடிப்பார், எந்த பந்தில் பவுண்டரி விளாசுவார் என்பது உள்பட பல்வேறு வகையில் சூதாட்டம் நடத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றனர்.