காதல் திருமணத்தால் 12 குடும்பம் ஒதுக்கிவைப்பு?
அன்னூர்

கோவை: கோவை மாவட்டம் அன்னூர் அருகே 12 குடும்பங்களை சேர்ந்தவர்களை காதல் திருமணம் செய்ததால், ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதாக, முதல்வரின் தனிப்பிரிவுக்கு சுந்தரம் என்பவர் மனு அனுப்பி இருந்தார்.
இது தொடர்பாக அன்னூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.ஆனாலும் உடன்பாடு ஏற்படவில்லை.. இரண்டாவது முறையாக நடந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை.
கோவை மாவட்டம் அன்னூர் அருகே வடக்கல்லூரை சேர்ந்தவர் சுந்தரம் என்பவர் கோவை மாவட்ட கலெக்டர் மற்றும் தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு அனுப்பினார். அவர் அனுப்பிய மனுவில், 'சுந்தரமாகிய நான் மற்றும் 12 குடும்பங்களை சேர்ந்தவர்கள் காதல் திருமணம் செய்ததால் ஊரை விட்டும், தங்களது உறவினர்களை ஒதுக்கி வைத்து உள்ளனர். எங்களை கோவில் விசேஷங்களுக்கு அழைப்பது இல்லை. தங்களது குடும்ப நிகழ்ச்சிக்கு உறவினர்களாக இருந்தும் எதிர் தரப்பினர் வருவது இல்லை" என்று கூறியிருந்தார்.
இந்த பிரச்சினை தொடர்பாக கோவை மாவட்ட அன்னூரில் இருதரப்பினரும் சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டனர். அதன்படி அன்னூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதையடுத்து 2-வது முறையாக கடந்த ஜனவரி 9ம் தேதி அன்று, அன்னூர் அருகே உள்ள வடக்கலூர் கன்னிமார் கருப்பராயன் கோவில் வளாகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில், அன்னூர் தாசில்தார் குமரிஆனந்தன், துணை தாசில்தார் தெய்வ பாண்டியம்மாள், வருவாய் ஆய்வாளர் திவ்யா, போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர்கள் குமார், ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றார்கள்.
இதில் சுந்தரம் தரப்பினர் பேசுகையில், எங்களது வீட்டில் நடக்கும் சுபகாரியங்களுக்கும், அசுப காரியங்களுக்கும் எதிர் தரப்பினர் பங்கேற்பது இல்லை. கோவில் விழாவிற்கும் எங்களை அழைப்பதில்லை என்றார். எதிர் தரப்பினர் பேசுகையில், கோவிலுக்காக வசூலித்த பணத்திற்கு கணக்கு காண்பிக்கவில்லை. ஊருக்கு என்று உள்ள சில கட்டுப்பாடுகளை இவர்கள் மீறி நடக்கின்றனர்.
எனவே அவர்களுடன் இணைந்து கமிட்டியில் சேர முடியாது என்றனர். இதையடுத்து அதிகாரிகள் இரு தரப்பினரிடமும் 2 மணி நேரத்திற்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இரு தரப்பினரும் தங்களின் கருத்தில் விடாப்பிடியாக இருந்தார்கள். இதனால் உடன்பாடு எதுவும் ஏற்பட வில்லை. எனவே அடுத்த கட்டமாக பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தி முடிவு செய்யலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதை ஏற்று இருதரப்பினரும் கலைந்து சென்றார்கள். இந்த சம்பவம் அன்னூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.