காதல் திருமணம் செய்தால் 25 ஆயிரம் ரூபாய் அபராதம்! கிருஷ்ணகிரி கட்டப்பஞ்சாயத்து கொடூரம்!!
கிருஷ்ணகிரி
காதல் திருமணம் செய்தால் 25 ஆயிரம் ரூபாய் அபராதம்! கிருஷ்ணகிரி கட்டப்பஞ்சாயத்து கொடூரம்!!
கிருஷ்ணகிரி: கே ஆர் பி அணை அருகே உள்ள நாகராஜபுரம் கிராமத்தில் காதல் திருமணம் செய்தால் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து ஊரை விட்டு ஒதுக்கி வைத்த வன்கொடுமை அரங்கேறி உள்ளது.
நாகராஜபுரம் கிராமத்தில் சுமார் 70-க்கும் மேற்பட்ட பட்டியல் சமூக மக்கள் வசித்து வருகின்றனர், இந்த நிலையில் கடந்த வருடம் யோகேஸ்வரி, செல்வேந்திரன், இஷாந்த் உள்ளிட்ட காதல் இணையர்கள் திருமணம் செய்து கொண்டு சொந்த ஊருக்கு திரும்பி இருந்த நிலையில், ஊர் தலைவர் சேகர் தலைமையில் கட்ட பஞ்சாயத்து பேசி காதல் இணையர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதித்துள்ளனர், ஆனால் ஏழ்மையின் காரணமாக அபராதத்தை செலுத்த முடியவில்லை, இந்த நிலையில் ஊர் தலைவர் மூன்று குடும்பங்கள் உள்ளிட்ட மொத்தம் 15 குடும்பங்களை நாகராஜபுரம் கிராமத்திலிருந்து ஒதுக்கி வைத்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்கனவே மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு புகார் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை, ஊர் தலைவராக இருக்கும் சேகர் என்பவர் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓட்டுநராக பணியில் இருந்து வருகிறார் இந்த அதிகாரத்தை பயன்படுத்தி ஊர் மக்களை பிளவுபடுத்தி அதில் ஆதாயம் அடைவதாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குற்றச்சாட்டு, சேகர் மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டு உள்ளதாகவும்,துறை ரீதியான நடவடிக்கைக்கு உள்ளானதாகவும் தெரிவிக்கின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள்.
மாவட்ட ஆட்சியர் அவர்கள் அரசு ஊழியர் நடத்த விதிகளை மீறியும், தொடர்ந்து பட்டியல் சமூக மக்கள் மீது கட்டப்பஞ்சாயத்து, வன்கொடுமை செய்து வரும் அரசு ஊழியரான சேகர் மீது நடவடிக்கை எடுத்து காதல் இணையர்களுக்கு சொந்த ஊரில் வாழ பாதுகாப்பு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் சிவகுமாரிடம் கேட்டபோது, ஓட்டுநர் சேகர் மீது புகார் மனு வரப்பட்டு உள்ளது, புகார் மனுவின் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
செய்தியாளர்
மாருதி மனோ
