முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள்."

தங்கம் விலை சரிவு

முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள்."

பொதுவாகவே வளைகுடா நாடுகள் என்றாலே நம் ஊர் மக்களுக்கு நினைவுக்கு வருவது இரண்டு விஷயங்கள்தான்.

ஒன்று 'பெட்ரோல்', இன்னொன்று 'சுத்தமான தங்கம்'. ஆனால், இப்போது அங்கு வீசும் போர் மேகங்களால் அந்த தங்கத்தின் ஜொலிப்பு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது.

துபாய், கத்தார், ஓமன் என வளைகுடா நாடுகளில் கடை விரித்திருக்கும் முன்னணி இந்திய ஜுவல்லரி நிறுவனங்களான மலபார் கோல்ட், கல்யாண் ஜூவல்லர்ஸ், ஜாய் ஆலுக்காஸ், மற்றும் டாடா குழுமத்தின் தனிஷ்க் ஆகியவை இப்போது ஒரு பெரிய சவாலைச் சந்தித்து வருகின்றன. கடந்த மார்ச் மாதத்தோடு ஒப்பிடும்போது, இந்த ஆண்டு விற்பனை சுமார் 70% வரை சரிந்துள்ளதாக அதிரவைக்கின்றன புள்ளிவிவரங்கள்.

காலியான ஷோரூம்கள்: என்ன நடக்கிறது அங்கே?

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே செலவு செய்கிறார்கள். கடைகள் திறந்திருந்தாலும், வாடிக்கையாளர்கள் வரத்து (Footfall) மிக மோசமாக இருக்கிறது.

சுற்றுலாப் பயணிகள் மாயம்: வளைகுடா நாடுகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள்தான் ஜுவல்லரி விற்பனையின் முதுகெலும்பு. போர் சூழலால் சுற்றுலாப் பயணிகள் வருகை கணிசமாகக் குறைந்துவிட்டது.

ஆபரணம் Vs பிஸ்கட்: நகை வாங்க நினைப்பவர்கள் கூட, இப்போது டிசைன் நகைகளைத் தவிர்த்துவிட்டு, பாதுகாப்பான முதலீடாகக் கருதி தங்கக் காசுகள் மற்றும் கட்டிகளை (Bullion) மட்டுமே வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்தியர்களின் தயக்கம்: அங்கு வசிக்கும் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக இந்தியர்கள், எதிர்காலப் பாதுகாப்பு கருதி கையில் இருக்கும் பணத்தை நகைகளில் முதலீடு செய்யத் தயங்குகிறார்கள்.

விரிவாக்கத் திட்டங்களுக்கு 'பிரேக்'!

சுமார் 2 பில்லியன் டாலர் மதிப்புள்ள வளைகுடா நகை சந்தையில், பாதிக்கு மேல் இந்திய நிறுவனங்களின் ஆதிக்கம்தான். ஆனால், இப்போதுள்ள சூழலில் புதிய கிளைகளைத் தொடங்கும் திட்டங்களை அனைத்து நிறுவனங்களும் காலவரையறையின்றி தள்ளி வைத்துள்ளன.

ஜாய் ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் ஜாய் ஆலுக்காஸ் இதுகுறித்துக் கூறுகையில், "போர் தொடங்கிய முதல் வாரம் நிலைமை மிக மோசமாக இருந்தது. இப்போது கடைகள் திறந்திருந்தாலும், விற்பனை அளவு (Volume) இன்னும் பழைய நிலைக்கு வரவில்லை," என வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார்.

அதேபோல், வளைகுடா நாடுகளில் 13 கிளைகளைக் கொண்டுள்ள தனிஷ்க், சவூதி அரேபியா போன்ற ஒரு சில பகுதிகளில் ஈத் பண்டிகை விற்பனை ஓரளவுக்குக் கைகொடுத்தாலும், ஒட்டுமொத்த சென்டிமென்ட் இன்னும் டல்லாகவே இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

மாற்று வழி என்ன?

வளைகுடா சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த இழப்பை ஈடுகட்ட, இந்திய நிறுவனங்கள் இப்போது தங்கள் பார்வையை அமெரிக்கா மற்றும் தூர கிழக்கு ஆசிய நாடுகளின் (Far East) பக்கம் திருப்பியுள்ளன. வளைகுடா நாடுகளின் செயல்பாடுகளை அங்கிருந்து மற்ற நாடுகளுக்கு மடைமாற்றம் செய்யும் முயற்சியில் அவர்கள் இறங்கியுள்ளனர்.

இந்திய நுகர்வோர் சந்தையில், வளைகுடா நாடுகளைச் சார்ந்து இருக்கும் மிகப்பெரிய துறை இந்த நகைத்துறைதான். ஆண்டுக்கு 20% முதல் 25% வரை வருவாய் அங்கிருந்துதான் கிடைக்கிறது. மாரிகோ, டாபர் போன்ற எஃப்.எம்.சி.ஜி (FMCG) நிறுவனங்களை விடவும், நகை நிறுவனங்களே இந்தப் போரினால் அதிகப் பாதிப்பைச் சந்தித்துள்ளன.

நிச்சயமற்ற இந்தச் சூழலில், 'தங்கம்' மீண்டும் எப்போது பழையபடி ஜொலிக்கும் என்பது போர் மேகங்கள் விலகுவதில்தான் இருக்கிறது!