ஓசூர் அருகே பழமை வாய்ந்த கோயில் கோபுர பிரதிஷ்டாபன விழா .!
கிருஷ்ணகிரி
ஓசூர் அருகே பழமை வாய்ந்த கோயில் கோபுர பிரதிஷ்டாபன விழா : தலைமேல் தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்*
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள படுதேப்பள்ளி கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ கரியால லிங்கேஸ்வரர் சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் புதிதாக கட்டப்பட்ட கோயில் கோபுர நுழைவுவாயில் பிரதிஷ்டாபன கும்பாபிஷேக விழா மற்றும் சித்தேஸ்வர சுவாமி பிரதிஷ்டை செய்யும் விழா நடைபெற்றது.


முன்னதாக கனகதாசருக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடுகள் நடத்தப்பட்டன. அதே போல குறும்பர் இன மக்களின் பாரம்பரிய அடையாளமான நடுகற்களுக்கும் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
தொடர்ந்து கோயிலில் வீற்றிருக்கும் பீரேஸ்வரா, கரியலிங்கேஸ்வரா, உஜ்ஜினி லிங்கேஸ்வரர் மற்றும் லக்கம்மா தேவி ஆகிய உற்சவ தெய்வங்களை அலங்கரித்து கோயில் முழுவதும் மேளதாளங்கள் முழங்க சுற்றி வந்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
அதனைத் தொடர்ந்து குறும்பர் இன மக்கள் பாரம்பரிய முறைப்படி தலைமேல் தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன்களை செலுத்தினர். அலங்கரிக்கப்பட்ட காளைகளுக்கு முதலில் தேங்காய் உடைத்து வழிபாடு செய்யப்பட்ட பின் பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராக தலைமேல் தேங்காய்களை உடைத்து நேர்த்தி கடன் செலுத்தினர். இந்த விழாவில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கரியால லிங்கேஸ்வரர் சுவாமி கோயில் கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
