பா.ஜ.க நிலைமை படுமோசம், காங்கிரஸ் ஜெயிக்கக் கூடிய நிலை - லோக்பால் சர்வே கூறுவது என்ன?

பீகார் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல்

பா.ஜ.க நிலைமை படுமோசம், காங்கிரஸ் ஜெயிக்கக் கூடிய நிலை - லோக்பால் சர்வே கூறுவது என்ன?

டெல்லி: பீகார் தேர்தலோடு நாடு முழுக்க காலியாக இருக்கும் 8 சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.

அந்தத் தொகுதிகளில் எந்தக் கட்சி வெல்ல வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்த சர்வேயை லோக்போல் அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் 8 தொகுதிகளில் இரு தொகுதிகளில் மட்டுமே பாஜக வெல்ல வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி 4 தொகுதிகளிலும் இதர கட்சிகள் இரு தொகுதிகளிலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீகாரில் அடுத்த வாரம் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. அதோடு சேர்த்து நாடு முழுக்க காலியாக இருக்கும் 8 சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. இதற்கிடையே இடைத்தேர்தல் நடைபெறும் இந்த எட்டுத் தொகுதிகளில் எந்தக் கட்சி வெல்லும் என்பது குறித்து லோக்போல் அமைப்பு சர்வே ஒன்றை வெளியிட்டுள்ளது.

இடைத்தேர்தல் சர்வே

அதில் காஷ்மீரின் புட்காம் சட்டசபைத் தொகுதியில் காங்கிரஸ் கூட்டணி கட்சியான ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநாட்டுக் கட்சிக்கு 43% வாக்குகளும், ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு 37% வாக்குகளும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாஜகவுக்கு 12% வாக்குகளும், இதர கட்சிகளுக்கு 8% வாக்குகளும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் ஜம்மு காஷ்மீரில் இடைத்தேர்தல் நடைபெறும் மற்றொரு தொகுதியான நக்ரோட்டா தொகுதியில் பாஜகவுக்கு ஆதரவான ஒரு சூழலே நிலவுகிறது. அங்கு பாஜகவுக்கு ஆதரவாக 48% மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி 30% ஆதரவை மட்டுமே பெறுகிறது. காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி இன்னும் மோசமாக 15% மட்டுமே பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆம் ஆத்மி

பஞ்சாப்பின் டார்ன் தரன் தொகுதியைப் பொறுத்தவரை அங்கு ஆளும் ஆம் ஆத்மிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறதாம்.. இதில் அதிர்ச்சித் தகவல் என்னவென்றால் காங்கிரஸ் 3வது இடத்திற்குத் தள்ளப்படுகிறது. அங்கு நடத்தப்பட்ட சர்வேயில் ஆம் ஆத்மி 34% வாக்குகளை பெறுகிறது.. அகாலி தளம் 26% ஆதரவையும் காங்கிரஸ் 22% ஆதரவையும் பெறுகிறது. சுயேச்சைகள் 9% ஆதரவைப் பெறும் நிலையில், பாஜக 7% ஆதரவுடன் கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

காங்கிரஸ்

தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள ஜூபிலி ஹில்ஸ் சட்டசபைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியே வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு ஆளும் காங்கிரஸ் கட்சி 44% வாக்குகளைப் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேசிஆரின் பிஆர்எஸ் கட்சிக்கான செல்வாக்கு சரிந்து கொண்டே போகிறது. அவர்கள் 38% வாக்குகளைப் பெறுவார் என கூறப்பட்டுள்ளது. பாஜக 15% உடன் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், இதர கட்சிகள் 3% வாக்குகளை மட்டுமே பெறுகிறது.

ராஜஸ்தானில் உள்ள ஆன்டா சட்டசபைத் தொகுதியில் காங்கிரஸ் பாஜக இடையே கடும் போட்டி நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு பாஜகவுக்கு 38% வாக்குகளும், காங்கிரஸுக்கு 36% வாக்குகளும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் மற்றவை 26% வரை வாக்குகள் செல்லலாம்.. இதுவே வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதர தொகுதிகள்

ஒடிசா நுவாபாடா சட்டசபைத் தொகுதியிலும் கடும் போட்டி நிலவுகிறது. இருப்பினும், காங்கிரஸுக்கு சற்று அதிக ஆதரவு இருக்கிறது. அங்குக் காங்கிரஸுக்கு 37% வாக்குகள், பாஜகவுக்கு 33% வாக்குகள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஜு ஜனதா தள கட்சிக்கு 24% வாக்குகளும், இதர கட்சிகளுக்கு 6% வாக்குகளும் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் காட்சிலா தொகுதியில் ஆளும் காங்கிரஸ் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணிக்கு ஆதரவு அதிகமாகவே இருக்கிறது. ஜேஎம்எம் வேட்பாளர் 54% வாக்குகளைப் பெறும் நிலையில், பாஜக வேட்பாளர் 39% வாக்குகளைப் பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிசோரம் மாநிலத்தின் டம்பா தொகுதியில் எம்என்எஃப் கட்சிக்கும் (35%) ஆளும் சோரம் மக்கள் கட்சிக்கும் (32%) கடும் போட்டி உள்ளது. காங்கிரஸ் 21% வாக்குகளுடன் 3வது இடத்திலும் பாஜக 8% உடன் 4வடு இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது.