நான் ராஜினாமா செய்ய தயார்- அம்பேத்கர் சர்ச்சை விவகாரத்தில் அமித்ஷா அதிரடி
Parliament

எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்று சொல்வது இப்போது ஃபேஷனாகி விட்டது.
அதற்கு பதிலாக கடவுளின் பெயரை அத்தனை முறை கூறியிருந்தால், உங்களது 7 பிறவிக்கும் சொர்க்கத்தில் இடமாவது கிடைத்திருக்கும்" என்று மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.
அமித்ஷாவின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து இன்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் 'ஜெய் பீம்.. ஜெய் பீம்..' என முழக்கமிட்டனர். இதனால், அவையை நடத்தமுடியாமல், நாள் முழுக்க ஒத்திவைக்கப்பட்டது.
பலவேறு அரசியல் கட்சி தலைவர்களும் அமித்ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று மாலை 5.30 மணிக்கு டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்தச் செய்தியாளர் சந்திப்பில் அம்பேத்கர் குறித்து பேசியது தொடர்பாக விளக்கம் அளித்த அமித்ஷா, "அம்பேத்கர் மீது நேருவுக்கு இருந்த வெறுப்பு அனைவரும் அறிந்ததே" என்றும் "எனது கருத்தை திரித்து வெளியிடுகின்றனர்" என்றும் தெரிவித்தார்.
அவர் பேசியதாவது; "நேற்று முதல் காங்கிரஸ் உண்மையை திரித்து வெளியிட்டுவருகிறது. அதனை கண்டிக்கிறேன். அம்பேத்கர், அரசியலமைப்பு, இடஒதுக்கீடு ஆகியவற்றுக்கு எதிரானது காங்கிரஸ். அம்பேத்கரை எதிர்த்து வந்தது காங்கிரஸ் தான். காங்கிரஸ் வீர் சாவர்க்கரையும் அவமதித்தது. அவசர நிலையை பிரகடனப்படுத்தி அரசியலமைப்பை முழுமையாக சீர்குலைத்தது.
நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, பாபா சாகேப் அம்பேத்கரை காங்கிரஸ் எப்படி எதிர்த்தது என்பது நிரூபிக்கப்பட்டது. பாபா சாகேப் இறந்த பிறகும் காங்கிரஸ் அவரை கேலி செய்ய முயன்றது. பல முறை காங்கிரஸ் தலைவர்கள் தங்களுக்கு தாங்களே பாரத ரத்னா விருதை வழங்கிக்கொண்டார்கள். 1955 நேரு தனக்கு தானே பாரத ரத்னா விருதை வழங்கிக்கொண்டார். 1971ல் இந்திரா காந்தி தனக்கு தானே பாரத ரத்னா விருதை வழங்கிக்கொண்டார். 1990ல் தான் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அப்போது காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. பாஜக ஆதரவு தந்த அரசு ஆட்சியில் இருந்தது. அம்பேத்கர் மீது நேருவுக்கு இருந்த வெறுப்பு அனைவரும் அறிந்ததே.
எனது பேச்சு திரிக்கப்பட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக அவர்கள் (காங்கிரஸ்) பிரதமர் நரேந்திர மோடியின் திருத்தப்பட்ட அறிக்கைகளை வெளியிட்டனர். தேர்தல் சமயத்தில் எனது கருத்தை ஏ.ஐ. மூலம் திரித்து வெளியிட்டனர். இன்று எனது கருத்தை திரித்து வெளியிடுகின்றனர். எனது முழு பேச்சையும் ஒளிபரப்ப ஊடகங்களுக்கு கோரிக்கை வைக்கிறேன்.
அம்பேத்கரை எப்போதும் அவமதிக்காத அரசியல் கட்சியை சேர்ந்தவன் நான். முதலில் ஜனசங்கமும், பிறகு பாரதிய ஜனதாவும் அம்பேத்கரின் கொள்கைகளை எப்போதும் பின்பற்ற முயன்றன. பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருந்த போதெல்லாம் அம்பேத்கரின் கொள்கைகளை பிரசாரம் செய்துள்ளோம். இடஒதுக்கீட்டை வலுபடுத்த பாஜக பணி செய்தது. காங்கிரஸின் இந்த கேவலமான முயற்சியை நீங்கள் ஆதரித்திருக்கக் கூடாது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவிடம் இதையும் சொல்ல விரும்புகிறேன். ராகுலின் அழுத்தத்தால் நீங்களும் (கார்கே) இதில் இணைந்திருப்பது எனக்கு வருத்தமளிக்கிறது.
கார்கே என்னை ராஜினாமா செய்ய சொல்கிறார். அதுதான் அவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்றால் நான் ராஜினாமாவும் கூட செய்கிறேன். ஆனால், அது அவரின் பிரச்சனைகளை தீர்க்காது. அவர் இன்னும் 15 ஆண்டுகள் அதே இடத்தில் (எதிர்க்கட்சி வரிசையில்) தான் அமர்ந்திருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.