6 பந்துகளில் 6 சிக்சர் அடித்த ரியான் பராக்.! கெய்ல்,பொல்லார்ட்,ரிங்கு ஆகியோரை முந்தி சாதனை.!

கிரிக்கெட்

6 பந்துகளில் 6 சிக்சர் அடித்த ரியான் பராக்.! கெய்ல்,பொல்லார்ட்,ரிங்கு ஆகியோரை முந்தி சாதனை.!

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 4ஆம் தேதி கொல்கத்தாவில் 53வது போட்டியில் நடைபெற்றது. அப்போட்டியில் கொல்கத்தா வெறும் 1 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தானை தோற்கடித்தது.

அதனால் 5வது வெற்றியைப் பெற்ற கொல்கத்தா பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. மறுபுறம் போராடியும் தோற்ற ராஜஸ்தான் 9வது தோல்வியை சந்தித்தது.

அப்போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா 207 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக குர்பாஸ் 35, கேப்டன் ரஹானே 30, ரகுவன்ஷி 44, ரசல் 57* (25), ரிங்கு சிங் 19* (6) ரன்களை எடுத்து அசத்தினார்கள். அடுத்ததாக பேட்டிங் செய்த ராஜஸ்தானுக்கு ஜெய்ஸ்வால் 34 ரன்கள் எடுத்த போதிலும் சூர்யவன்சி 4, குணால் சிங் 0, துருவ் ஜுரேல் 0, ஹஸரங்கா 0 ரன்களில் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.

6 பந்தில் 6 சிக்ஸ்:

அதனால் 71/5 என ஆரம்பத்திலேயே தடுமாறிய ராஜஸ்தானுக்கு கேப்டன் ரியான் பராக் அதிரடியாக விளையாடினார். குறிப்பாக மொயின் அலி வீசிய 13வது ஓவரின் முதல் பந்தில் ஹெட்மயர் சிங்கிள் எடுத்தார். ஆனால் அடுத்த 5 பந்துகளில் ரியான் பராக் 6, 6, 6, 6, 6 என அடுத்தடுத்து 5 சிக்ஸர்களை தெறிக்க விட்டார்.

அடுத்ததாக வருண் சக்கரவர்த்தி 14வது ஓவரை வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் ஹெட்மயர் சிங்கிள் எடுத்தார். 2வது பந்தை எதிர்கொண்ட ரியான் பராக் மீண்டும் சிக்ஸர் பறக்க விட்டார். அந்த வகையில் ரியான் பராக் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்தார். இதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் என்ற வரலாறு காணாத சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.

உண்மையான கனவு:

இதற்கு முன் கிறிஸ் கெய்ல் (2012), கைரன் பொல்லார்ட் (2013), ரிங்கு சிங் (2023) முறையே புனே, ஹைதெராபாத், குஜராத்துக்கு எதிராக 5 பந்துகளில் 5 சிக்சர்கள் அடித்ததே முந்தைய சாதனை. முன்னதாக ஐபிஎல் தொடரில் 4 பந்துகளில் 4 சிக்ஸர்கள் அடிக்கப் போகிறேன் என்று உணர்வதாக ரியான் பராக் 2023ஆம் ஆண்டு மே 14ஆம் தேதி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

தற்போது தம்முடைய உணர்வை முந்தி 2 சிக்ஸர்கள் எக்ஸ்ட்ராவாக அடித்துள்ள அவர் அபார சாதனையும் படைத்துள்ளார். இருப்பினும் 95 (45) ரன்கள் அடித்த அவர் ஃபினிஷிங் செய்யத் தவறினார். அதே போல ஹெட்மயர் 29, சுபம் துபே 25*, ஆர்ச்சர் 12 ரன்கள் எடுத்தும் ராஜஸ்தான் 1 ரன்னில் வெற்றியை தவற விட்டது. கொல்கத்தாவுக்கு அதிகபட்சமாக மொயின் அலி, ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.