காந்திகிராம பல்கலையில் கூட்டுறவு வார விழா துவக்கம்

காந்திகிராம பல்கலையில் கூட்டுறவு வார விழா துவக்கம்

காந்திகிராம பல்கலைக்கழகத்தில் இயங்கும் கூட்டுறவியல் துறை, அகில இந்திய கூட்டுறவு வார விழா கொடி ஏற்றத்துடன் துவக்கியது. கூட்டுறவுக்கொடியை ஏற்றி சிறப்புரை ஆற்றிய துணைவேந்தர் பேராசிரியர் N.பஞ்சநதம் அவர்கள் கூட்டுறவு இயக்கம் கிராமங்கள் தோறும் வேர் ஊன்றி இருக்கிறது என்றார்.

கிராமிய பொருளாதார முன்னேற்றத்தில் கூட்டுறவுகளின் பங்கு அளப்பரியது இந்தியாவில் எளியோர்களுக்கான இயக்கமாக கூட்டுறவு சங்கங்கள் மகத்தான சேவை ஆற்றுகின்றன.

விவசாயிகள், பெண்கள், நெசவாளர்கள், கைவினையாளர்கள், பால் உற்பத்தியாளர்கள் போன்றவர்களுக்கு வாழ்வாதார   சக்தியாக இருந்து அவர்களுடைய வாழ்க்கையை தொடர்ந்து மேம்படுத்தி வருகின்றது.

மக்களுக்கான இந்த இயக்கத்தை இளைஞர்களாகிய பல்கலை கழக மாணவர்கள் முழு ஒத்துழைப்பு நல்கி அதை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல முயற்சி எடுக்க வேண்டும் என்று துணைவேந்தர் கூறினார்.

விழாவை தலைமையேற்று நடத்திய கூட்டுறவியல் துறை தலைவரும் மேலாண்மை கல்வி புலத்தின் முதன்மையாளருமான பேராசிரியர் தமிழ்மணி அவர்கள் இந்தியாவில் கூட்டுறவு இயக்கம் தொடங்கி சுமார் 120 ஆண்டுகள் ஆகின்றன.  

8 லட்சத்துக்கு மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் மக்களின் சமூக மற்றும் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்து மிகப் பெரிய மாற்றத்திற்கு தொடர்ந்து அரும் பணியாற்றி வருகின்றது.

இந்தியாவின் முதல் பிரதமராகிய நேரு அவர்கள் கூட்டுறவு அமைப்பின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்ததன் காரணமாகவும் நாட்டு முன்னேற்றத்திற்கு அவைகளுடைய பங்கு மிகவும் இன்றி அமையாதது என்று நினைத்து பல்வேறு செயல் திட்டங்களை தீட்டினார்.

குறிப்பாக அகில இந்திய கிராமிய கடன் அளவைக் குழுவை அமைத்து அதன் பரிந்துரைகளை முழுமையாக செயல்படுத்தியது, கூட்டுறவின் மூலம் சிறப்பான விவசாயம் சிறப்பான வாழ்க்கை என்ற தீர்மானத்தை இயற்றியது:

திட்டமிட்ட பொருளாதார அமைப்பை ஏற்படுத்தி அதில் கூட்டுறவு அமைப்பிற்கு முக்கிய பங்கு அளித்தது என்று பல சிறப்புகளை கூறலாம். இதன் தொடர்சியாக  இன்றைய ஆட்சியர்களும் கூட்டுறவு வளர்ச்சிக்காக 54 சிறப்பு திட்டங்களை  இயற்றி அதை செயல்படுத்தியும் வருகிறார்கள். 

குறிப்பாக உலகளவில் பெரிய தானிய கிடங்கினை ஏற்படுத்துதல், தேசிய அளவிலான கூட்டுறவு அமைப்புகளை ஏற்படுத்தி அதன் மூலம் இயற்கை விவசாயம், எண்ணெய் வித்து விதைகள் உற்பத்தி, விவசாய ஏற்றுமதி போன்ற சீரிய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.  

வளர்ச்சியடைந்த இந்தியா 2047 என்ற பெரும் கனவு திட்டத்தில் கூட்டுறவு அமைப்புகளின் பங்கு மிக முக்கியமாதாக இருக்கும் என்று அறிவித்து உள்ளனர்.
மேலும் இச்சிறப்பு நிகழ்ச்சியில் கூட்டுறவியல் துறை பேராசிரியர்களான   ரவிச்சந்திரன் மணிவேல், பிச்சை, பாஸ்கர், தேவன், ரகுபாலன் மற்றும்   இதர ஆசிரியர்களும் ஆராய்ச்சி மாணவர்களும், கூட்டுறவியல் துறை மாணவர்களும் மூன்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.