ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுவது ஏன்?
ஈரோடு

ஈரோடு கிழக்குத் தொகுதியில் 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார். கடந்த 2023-ஆம் ஆண்டு அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து ஈரோடு கிழக்குத் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. திமுக கூட்டணி சார்பில் திருமகன் ஈவெராவின் தந்தை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் அவர் உயிரிழந்ததை தொடர்ந்து, பிப்ரவரி 5-ஆம் தேதியன்று ஈரோடு கிழக்குத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் பணிகள் கடந்த வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 10) தொடங்கியுள்ளன. தற்போது வரை மூன்று சுயேச்சை வேட்பாளர்கள் ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிட விண்ணப்பித்துள்ளனர்.
யார் இந்த வி.சி.சந்திரகுமார்?
காங்கிரஸ் கட்சியின் சிட்டிங் தொகுதியான ஈரோடு கிழக்கு தொகுதியில் யார் வேட்பாளராக அறிவிக்கப்படுவார்?' என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், தற்போது திமுக போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளரும் ஈரோடு கிழக்குத் தொகுதி முன்னாள் எம்எல்ஏவுமான வி.சி.சந்திரகுமார் போட்டியிட உள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.
இவர் இதே தொகுதியில் 2011-ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
தேமுதிகவின் கொள்கை பரப்புச் செயலாளராகவும் தேமுதிகவின் சட்டமன்ற கொறடாவாகவும் வி.சி.சந்திரகுமார் இருந்துள்ளார். 2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் திமுகவுக்கு எதிராக தேமுதிக தலைமையில் மக்கள் நலக் கூட்டணி உருவானது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வி.சி.சந்திரகுமார், சேலம் எஸ்.ஆர்.பார்த்திபன் உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். தற்போது திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார் போட்டியிட உள்ளார்.