பல லட்சம் மதிப்பிலான செம்மர கட்டைகளை மடக்கி பிடித்த காவல்துறை.!

குற்றம்

பல லட்சம் மதிப்பிலான செம்மர கட்டைகளை மடக்கி பிடித்த காவல்துறை.!

திருப்பத்தூர் மாவட்டம் கருப்பனூர் பகுதியில் செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா இ.கா.ப. -விற்கு ரகசிய தகவல் கிடைத்ததின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, சாரதி (வயது 20) என்பவரின் ஃபோர்டு காரில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 6 செம்மர கட்டைகள் இருப்பது தெரிய வந்தது.தொடர்ந்து, செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் சாரதியை கைது செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

போலீசாரின் தொடர் விசாரணையில் கொடுமாப்பள்ளி பகுதியை சேர்ந்த விக்னேஷ் (வயது 30) என்பவர் பி.கே.பி நகர் பகுதியில் உள்ள கிருஷ்ணவேணி என்பவருடைய வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு செம்மரம் வெட்டுவதற்கு தேவையான ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அங்கு சென்ற போலீசார் மற்றும் வனத்துறையினர் வீட்டின் பூட்டை உடைத்து 10 கோடாரி, டிராவல் பேக், டார்ச் லைட், ரம்பம் மற்றும் உடைகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் விக்னேஷ் செம்மரக்கட்டைகள் வெட்டுவதற்காக ஆட்களை சேர்த்து வந்தது தெரியவந்தது.

இதன்பேரில் விக்னேஷை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். செம்மரக்கட்டைகளை திருப்பத்தூரில் இருந்து வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்து வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.