CSK அணி பந்துவீச்சு தான் இருப்பதிலேயே பலமானது! பேட்டிங்கில் புதிய ஸ்டார் வருவார்-ஸ்ரீகாந்த்

CSK அணி பந்துவீச்சு தான் இருப்பதிலேயே பலமானது! பேட்டிங்கில் புதிய ஸ்டார் வருவார்-ஸ்ரீகாந்த்

மும்பை : ஐபிஎல் மெகா ஏலம் முடிவில் ஒவ்வொரு அணியும் தங்களால் இயன்றவரை ஒரு பலமான அணியை உருவாக்கி இருக்கிறது. 

அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மெகா ஏலம் முடிவில் 7 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 20 வீரர்களை தேர்வு செய்திருக்கிறது. அதிகபட்சமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆப்கானிஸ்தான் சுழற் பந்துவீச்சாளர் நூர் அகமதை 10 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது.

தமிழக வீரர் அஸ்வினை ஒன்பது கோடியே 75 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறது. இந்த நிலையில் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செயல்பாடு குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கூறியுள்ள கருத்தை தற்போது பார்க்கலாம். ஐபிஎல் மெகா எழுத்திலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பங்குவீச்சு தான் பலமாக இருக்கின்றது.

வேகபந்துவீச்சு, சுழற் பந்துவீச்சு என இரண்டு தரப்பிலும் சிஎஸ்கே நல்ல வீரர்களை வாங்கியிருக்கிறார்கள். சேப்பாக்கம் போன்ற ஆடுகளத்தில் நூர் அகமது அஸ்வின் ஜடேஜா என்ற மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் நிச்சயம் பிளேயிங் லெவனில் இருப்பார்கள். பதிராணா வேகப்பந்து வீச்சில் இருப்பார். இந்த நான்கு வீரர்களை வைத்து சிஎஸ்கே அணி 16 ஓவர் களை வீசிவிடும்.

இதேபோன்று கலீல் அகமத் பிளேயிங் லெவனில் இருப்பார். ஷாம் கரன் அல்லது ரச்சின் ரவீந்திரா, தீபக் ஹூடா போன்ற வீரர்கள் சில ஓவர்களை வீசுவார்கள். இதன் மூலம் சிஎஸ்கே அணி 22 ஓவர்கள் வரை கூட இந்த பவுலர்களிடமிருந்து வாங்கிவிடலாம். இதே போன்று பதிராணாவுக்கு காயம் ஏற்பட்டால், அவருக்கு பதிலாக நாதன் எலிசை எடுத்து இருக்கிறார்கள். அவர் சேப்பாக் போன்ற ஆடுகளத்தில் எல்லாம் சிறப்பாக பந்து வீசுவார்.

ஆப்கானிஸ்தான் வீரர் நூர் அகமது தான் இருப்பதிலேயே சிறந்த தேர்வாக நான் நினைக்கின்றேன். அவர் குஜராத் ஆடுகளத்தில் கூட விக்கெட்டை எடுப்பார். இதனால் சிஎஸ்கே அணிக்கு பந்துவீச்சில் எந்த குறையும் இல்லை. பேட்டிங்கில் பலரும் சிஎஸ்கே அணியில் 3,4,5 வது வீரர்கள் சரி இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால் ஒன்றை மட்டும் மறந்து விட வேண்டாம். சிஎஸ்கே அணியில் திடீரென்று புதிய ஸ்டார்கள் பிறப்பார்கள். கிரிக்கெட் வாழ்க்கையை முடிந்தது என நினைத்த உத்தப்பா, ரஹானே, வாட்சன் போன்ற வீரர்கள் எல்லாம் சிஎஸ்கேவுக்கு வந்து அதிரடியாக விளையாடி ரன் குவித்தார்கள்.

இதேபோன்று தற்போது இருக்கும் சிஎஸ்கே அணியில் ராகுல் திருப்பாதி, தீபக் ஹூடா, விஜய் சங்கர், ஷாம் கரண் போன்ற வீரர்கள் பேட்டிங்கில் ஜொலிக்க வாய்ப்பு இருக்கின்றது. குறிப்பாக தீபக் ஹூடா திறமை வாய்ந்த வீரராக இருக்கிறார்.

அவர் இந்திய அணிக்கு சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். தற்போது சிஎஸ்கே அணிக்கு வந்திருப்பதன் மூலம் தீபக் ஹூடாவை சிஎஸ்கே அணி மெருகேற்றி அவரை ஒரு நல்ல பேட்ஸ்மேனாக மாற்றும்.இதன் காரணமாக சிஎஸ்கேவை பொருத்தவரை பேட்டிங்கில் புதிய ஸ்டார் ஒருவர் உருவாகலாம். அப்படி நடக்கும் பட்சத்தில் சிஎஸ்கே அணி பலம் வாய்ந்த அணியாக விளங்கும் என்று ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.