இந்திய கப்பல்கள் ஹார்மூஸை கடக்க ஈரான் அனுமதி அளித்ததா? விபரம் என்ன?
ஹார்மூஸ் ஜலசந்தி பிரச்சினை
டெல்லி: ஹார்முஸ் ஜலசந்தியை 2 இந்திய எண்ணெய் கப்பல்கள் கடந்துள்ளன. இந்நிலையில் தான் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதை தொடர்ந்து இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க ஈரான் அனுமதித்ததாக தகவல்கள் வெளியாகின.
இதுபற்றி மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வாலிடம் கேட்டபோது இதுபற்றிய தெளிவு இன்னும் இல்லை என்று கூறியுள்ளார். இது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்கா - இஸ்ரேல் நாடுகளின் போர் காரணமாக ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்தது. சவுதி அரேபியா, கத்தார், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், ஈராக் உள்பட பிற மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் கச்சா எண்ணெய், கேஸ் கொண்டு வரப்படும்.
இதனால் இந்தியாவுக்காக கச்சா எண்ணெய், கேஸ் விநியோகம் பாதிக்கப்பட்டது. மேலும் ஹார்முஸ் ஜலசந்திக்கு முன்பாக பாரசீக வளைகுடா கடல் பகுதியில் இந்திய கொடியுடன் 28 கப்பல்கள் வலம் வருகின்றன. இந்த கப்பல்கள் இந்தியா வர முடியாமல் தவித்து வருகின்றன.
இந்திய கப்பல்களுக்கு அனுமதியா?
இந்த கப்பல்களை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சிடம் இன்று 3வது முறையாக பேசினார். இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. மேலும் இந்திய கப்பல்கள் 'புஷ்பக்' மற்றும் 'பரிமல்' ஆகியவை ஹார்முஸ் ஜலசந்தியை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
மத்திய வெளியுறவுத்துறையிடம் கேள்வி
ஆனாலும் கூட இந்திய கப்பல்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தியில் பயணிக்க ஈரான் அனுமதி வழங்கியதா? இல்லையா? என்பது பற்றிய தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை. இதுபற்றி மத்திய அரசு சார்பில் விளக்கமும் அளிக்கவில்லை. இந்நிலையில் தான் மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், ஹாஸ்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிய நிலையில் ஈரான் - இந்தியா இடையே நடந்த பேச்சுவார்த்தை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
விவரங்களை கூற முடியாது
அதற்கு ரந்தீர் ஜெய்ஸ்வால், ''இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு, கப்பல் போக்குவரத்து குறித்து இந்தியா ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. வெளியுறவு அமைச்சர்ஜெய்சங்கர், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் 3 முறை பேசினார். கடைசியாக பேசிய உரையாடலில் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு, கப்பல் போக்குவரத்து குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இதுபற்றி பிற விவரங்களை இப்போது என்னால் கூற முடியாது'' என்றார்.
தெளிவு இல்லையாம்
இதையடுத்து பத்திரிகையாளர்கள் '' மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேசிய பிறகு இந்தியாவுக்கான எண்ணெய் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல ஈரான் அனுமதிக்கப்பட்டதாகவும், 2 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்துள்ளதாகவும் தகவல்கள் வருகிறதோ'' என்ற கேள்வியை முன்வைத்தனர். அதற்கு ரந்தீர் ஜெய்ஸ்வால், ''இதுபற்றி தற்போது தெளிவு எதுவும் இல்லை. இதுதொடர்பாக அரசு மாலையில் விரிவான தகவல்களை வழங்கும்'' என்றார்.
இதனால் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு ஈரான் அனுமதி வழங்கியதாக பரவும் தகவல் பொய்யா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை இது பொய்யாக இருக்கும் பட்சத்தில் வரும் நாட்களில் இந்தியாவில் கச்சா எண்ணெய், கேஸ் தட்டுப்பாடு அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
